
நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நிதின் கட்கரியிடம் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, திருச்சி - துவக்குடி இடையே உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
மேலும், நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள பரனூர். சென்னசமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் எனவும் தமிழகத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு சாலை திட்டங்களை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம் என்றார்.