ஆளுநர் ஒரு போஸ்ட்மேன் தான் -வெளுத்து வாங்கிய உதயநிதி!

ஆளுநர் ஒரு போஸ்ட்மேன் தான் -வெளுத்து வாங்கிய உதயநிதி!

ஆளுநர் ஒரு போஸ்ட்மேன் தான். மசோதாவை அனுப்புவது தான் அவரது வேலை என திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் திமுக மாணவரணி சார்பில் கல்வி – சமூகநீதி – கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு இன்று நடைபெற்றது. அதில் திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், " இந்த மாநாட்டில் பங்கேற்க எனக்குள்ள ஒரே தகுதியாக நான் கருதுவது அனிதாவின் அண்ணன் என்பதுதான். அனிதாவின் அண்ணனாகவே நான் பேசுகிறேன். அனிதாவின் மரணம் தற்கொலையல்ல. கொலை. பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து செய்த கொலை அது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரையிலும் நீட் தேர்வு இங்கு வரவில்லை" என்று பேசினார்.

மேலும் அவர் பேசுகையில்," 7 கோடி தமிழ் மக்களின் உத்தரவை மதிக்க வேண்டியது தான் ஆளுநரின் கடமை. நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் 7 கோடி மக்களையும் அவர் அவமதிக்கிறார். இதர மாநிலங்களும் ஒன்றிணைந்து நீட் தேர்வுக்கு எதிராக போராட வேண்டும். கல்வியை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. அது நினைப்பதை, மாநிலங்கள் செய்ய வேண்டும் என்று நினைகின்றது. ஆளுநர் ஒரு போஸ்ட்மேன் தான். மசோதாவை அனுப்புவது தான் அவர் வேலை. எனவே, தமிழக முதல்வரின் எச்சரிக்கைக்கு ஆளுநர் செவிமடுப்பார் என்று நம்புகிறேன். பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு நிதி ஒதுக்கும் போது, அவற்றுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரமும் மாநில அரசுக்கே உண்டு” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in