`பாலியல் வழக்குகளில் இனி இந்த பரிசோதனை செய்யக்கூடாது'

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
`பாலியல் வழக்குகளில் இனி இந்த பரிசோதனை செய்யக்கூடாது'

பாலியல் வழக்குகளில் இரு விரல் பரிசோதனைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெரம்பூரயில் தையல் கடை நடத்தியவர் ராஜீவ் காந்தி. தையல் பயிற்சி பெற வந்த 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக ராஜீவ் காந்தியை மாத்தூர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம், ராஜீவ் காந்திக்கு கடத்தல் பிரிவில் 7 ஆண்டு சிறை, போக்சோ பிரிவில் ஆயுள் சிறை (வாழ்நாள் முழுவதும்) தண்டனை வழங்கி 5.5.2021 தீர்ப்பளித்தது. தண்டனையை ரத்து செய்யக்கோரி ராஜீவ் காந்தி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார். இதனை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர்.

மனுதாரர் வழக்கறிஞர் எஸ்.சிவசுப்பிரமணியம் வாதிடுகையில், தமிழகத்தில் பாலியல் வழக்குகளில் பெண்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த மருத்துவ பரிசோதனை அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. பல்வேறு மாநிலங்களில் இரு விரல் பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் 10.4.2022-ல் வெளியான கட்டுரையில், பாலியல் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள மருத்துவ பரிசோதனை முறைகள் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் இரு விரல் பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பாலியல் வழக்குகளில் குறிப்பாக இளம் வயதினர் சம்பந்தப்பட்ட பாலியல் வழக்குகளில் இரு விரல் பரிசோதனை அமலில் உள்ளது. இந்த சோதனை சம்பந்தப்பட்ட பெண்களின் தனியுரிமையை மீறுவது என 2013-ல் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பல்வேறு உயர் நீதிமன்றங்களும் இந்த பரிசோதனையை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. இதனால் இனிமேலும் இரு விரல் பரிசோதனை தொடர்வதை அனுமதிக்க முடியாது. எனவே இரு விரல் பரிசோதனைக்கு உடனடியாக தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.

இந்த வழக்கை பொருத்த வரை பாலியல் குற்றத்துக்காக மனுதாரருக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையாக மாற்றப்படுகிறது. கடத்தல் பிரிவுக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்து செய்யப்படுகிறது" என கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.