
கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதியளிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை கறார் உத்தவு பிறப்பித்துள்ளது.
அண்மையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குநர் கருப்பசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "கட்டணம் செலுத்தாததால் மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தி வைப்பது, தண்டிப்பது போன்ற புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இதுபோன்ற புகார்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதியளிக்க பள்ளிக்கல்வித்துறை இன்று கறார் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கல்வி கட்டணம் செலுத்தாததால் மாணவர்களை வெளியே நிற்க வைப்பதாக புகார் எழுந்த நிலையில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றவில்லை என்றும் பெற்றோர்களை அவமதிக்கும் வகையில் செயல்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதி சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், "கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்ககூடாது. கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசக்கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை தனியார் பள்ளிகள் முறையாக பின்பற்றுகின்றனவா? என்பது குறித்து உறுதிமொழி சான்று தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவேளை சான்று தந்தும், அந்த பள்ளிகள் மீது ஏதேனும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.