மணல் குவாரிகளை திறக்க மார்ச் 30-ம் தேதி கெடு!

மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
மணல் குவாரிகளை திறக்க மார்ச் 30-ம் தேதி கெடு!
மனு கொடுக்க வந்தவர்கள்...

தமிழகம் முழுவதும் உடனடியாக மணல் குவாரிகளை திறந்துவிட வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் இன்று திருச்சி பொதுப் பணித்துறை அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜாமணி மற்றும் நிர்வாகிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள அதிகாரிகளிடம் மணல் குவாரிகளை திறக்கக்கோரி மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜாமணி கூறியதாவது: “தமிழகம் முழுவதும் மணல் குவாரிகள் முடங்கி உள்ளதால் தனியார் மற்றும் அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே அனைத்து பணிகளும் தொடர்ந்து தடையின்றி நடைபெறவும், லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சரிடம் நேரில் சென்று மனு கொடுத்தோம்.

அப்போது எங்களிடம் அமைச்சர் ஜனவரி 10-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 16 லாரி மணல் குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி மணல் குவாரிகள் இயங்கத் தொடங்கும் என தெரிவித்தார். ஆனால், இதுவரை அப்படி குவாரிகள் இயங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் இன்று பொதுப்பணித்துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இம்மாதம் 30-ம் தேதிக்குள் குவாரிகள் திறக்கப்படவில்லை என்றால் ஏப்ரல் 4-ம் தேதியன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம்"

இவ்வாறு ராஜாமணி தெரிவித்தார்.

Related Stories

No stories found.