தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நினைவுதினம் அனுசரிப்பு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நினைவுதினம் அனுசரிப்பு!
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது, காவல் துறையின் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததன் நான்காவது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தூத்துக்குடியில் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிமாவட்டத்தினருக்கு இந்த நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் சோக வடு இன்றுவரை தூத்துக்குடி மக்கள் மத்தியில் மறையவில்லை. இந்த நினைவுநாள முன்னிட்டு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் புகைப்படங்களைப் பதாகையாக வைத்து பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நினைவுதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட உட்கோட்டங்களில் காவல் துணை கண்காணிப்பாளரின் 30(2) காவல் சட்டம் நடைமுறையில் உள்ளது. இதனால் வெளிமாவட்டத்தினர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

நினைவுதினத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வசப்பபுரம், பெரியதாழை, செய்துங்கநல்லூர், சங்கரன் குடியிருப்பு, வேம்பார், கோடாங்கிப்பட்டி, தொட்டிலோவன்பட்டி, பருத்திக்குளம், சென்னமரெட்டியார்பட்டி, சவலாப்பேரி உள்பட பல பகுதிகளிலும் சோதனைச் சாவடிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தீவிர வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 9 காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 37 காவல் ஆய்வாளர்கள் உள்பட 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in