உணவு விநியோக ஊழியரைத் தாக்கிய காவலர் பணியிடை நீக்கம், கைது!

மோகனசுந்தரத்தைத் தாக்கும் காவலர் சதீஷ்
மோகனசுந்தரத்தைத் தாக்கும் காவலர் சதீஷ்

கோயம்புத்தூரில் தனியார் உணவு விநியோக ஊழியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டிருக்கிறார். இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை, சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம்(38). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். இவர், ஸ்விகி உணவு நிறுவனத்தில் விநியோக ஊழியராக உள்ளார்.

கோவை சிங்காநல்லூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக இருக்கும் சதீஷ், நேற்று பன்மால் சிக்னல் அருகே போக்குவரத்தை ஒழுங்குசெய்யும் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளிவாகனம் ஒன்று சாலையின் குறுக்கேவந்த பெண் ஒருவரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இதைப் பார்த்த மோகனசுந்தரம், பள்ளி வாகனத்தை நிறுத்தி, ‘இப்படி இடித்துவிட்டு மனிதாபிமானம் இல்லாமல் நிற்காமல் செல்கிறீர்களே?’ எனக் கேள்வி கேட்டுள்ளார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த போக்குவரத்துக் காவலர் சதீஷ், நடந்தது எதுவும் தெரியாமல், விசாரிக்கவும் இல்லாமல் மோகனசுந்தரத்தைத் தாக்கினார். அவரது செல்போனையும் பிடுங்கினார்.

இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டன. பெண்ணை இடித்துவிட்டுச் சென்ற வாகன ஓட்டுநரைத் தட்டிக்கேட்டவரைப் பாராட்டாமல் இப்படி போக்குவரத்துக் காவலர் தாக்குதல் நடத்தியது பொதுமக்களிடையே கடும் கண்டனத்தைக் கிளப்பியது. இந்நிலையில் நேற்று இரவு போக்குவரத்துக் காவலர் சதீஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தான் தாக்கப்பட்டது குறித்து மோகனசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் காவலர் சதீஷ் கைது செய்யப்பட்டார். காவல் துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேசமயம், காவல் நிலைய பிணையில் காவலர் சதீஷ் உடனடியாக விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in