குற்றாலத்தில் குளிக்க மீண்டும் அனுமதி: கூட்டம்தான் இல்லை!

குற்றால அருவி
குற்றால அருவி

கடந்த ஆறு நாட்களுக்குப் பிறகு இன்று குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டு சீஸன் நன்றாகவே தொடங்கியது. தென்மேற்குப் பருவமழையின் உபயத்தால் அருவிகளில் சீரான நீர்வரத்து எப்போதும் இருந்தது. அதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதியன்று நூற்றுக்கணக்கான மக்கள் குளித்துக்கொண்டிருந்தபோது மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு அதிகமானது.

உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அனைவரையும் அப்புறப்படுத்த முயன்றனர். ஏறத்தாழ அனைவரையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்திவிட்டாலும் 4 பெண்கள் உட்பட 5 பேர் அருவி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களின் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரோடு மீட்கப்பட்டுவிட்ட நிலையில் சென்னையைச் சேர்ந்த மல்லிகா, பண்ருட்டியைச் சேர்ந்த கலாவதி ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். அதனால் அருவிகளில் குளிப்பதற்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அருவியில் நீர்வரத்து குறைந்த பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த ஒன்றாம் தேதியன்று தென்காசி சுற்றுவட்ட பகுதிகளிலும், அருவியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக அருவியில் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அதனை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு அனைவரையும் பாதுகாப்பாக போலீஸார் வெளியேற்றினர். அதிலிருந்து கடந்த ஆறு நாட்களாக யாருக்கும் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்து வழக்கமான அளவே நீர் கொட்டுவதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஆறு நாட்களாக அனுமதி அளிக்கப்படவில்லை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை இன்று மிகக் குறைவாகவே காணப்பட்டது. இதனால் அருவியில் கூட்டம் மிகக்குறைவாக இருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in