கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களில் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களில் பயணிகளுக்கு அனுமதி

மேன்டூஸ் புயல் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களுக்கு  அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(டிச.11) முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மேன்டூஸ் புயல் காரணமாக  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த  எட்டாம் தேதி முதல் பலத்த‌ காற்றுடன் கூடிய கனமழை மழை பெய்தது. அதன் விளைவாக கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்த‌ன‌. தொடர்ந்து பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. அதனையடுத்து மரங்களை அப்புறப்படுத்தும் வகையிலும்,  சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதியும் 9 மற்றும் 10-ஆம்  தேதிகளில் அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி மறுத்தது.

இதனால் வ‌ன‌த்துறை க‌ட்டுப்பாட்டில் உள்ள‌ முக்கிய  சுற்றுலா த‌ல‌ங்க‌ளான‌ மோய‌ர்ச‌துக்க‌ம், பில்ல‌ர்ராக், குணாகுகை, பைன்ம‌ர‌க்காடுக‌ள் உள்ளிட்ட சுற்றுலாத‌ல‌ங்க‌ளிலும், பாதுகாக்க‌ப்பட்ட‌ வ‌ன‌ப்ப‌குதியான‌ பேரிஜ‌ம் ஏரி,தொப்பித்தூக்கிப் பாறை, ம‌திகெட்டான் சோலை, அமைதிப் ப‌ள்ள‌த்தாக்கு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌ல‌ங்க‌ளுக்கும் செல்ல முடியாமல் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

சனி, ஞாயிறு விடுமுறையை ஒட்டி அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்திருப்பதால் மரங்களை அகற்றும் பணியை அதிகாரிகள் துரிதப்படுத்தினர். விழுந்து கிடக்கும் மரங்களை  அக‌ற்றும் ப‌ணியில் நெடுஞ்சாலைதுறை, தீய‌ணைப்பு துறையின‌ர், ந‌க‌ராட்சி நிர்வாக‌த்தின‌ர், வ‌ன‌த்துறையின‌ர் இணைந்து செயல்பட்டு வ‌ந்த‌ன‌ர். 

அதன் விளைவாக  சுற்றுலா தலங்களில் உள்ள மரங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டதில், இன்று முதல் மீண்டும் அந்த இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அதனால் காலை முதலே சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அந்த பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in