பெட்ரோல், டீசலை வீழ்த்திய தக்காளி!

ஆந்திராவில் விலை ரூ.100-ஐ கடந்தது
பெட்ரோல், டீசலை வீழ்த்திய தக்காளி!

தக்காளி விலை நிமிடத்துக்கு நிமிடம் எகிறி வருகிறது. தமிழகத்தின் தக்காளி தேவையை பெருமளவு நிவர்த்தி செய்யும் ஆந்திராவிலேயே அதன் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளது. இதனால், தமிழகத்தில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

மழைக்கு முன்பு வரை கவலைக்குரியதாக இருந்த பெட்ரோல், டீசலின் விலையை, தற்போது தக்காளி முந்தியுள்ளது. தமிழகத்தில் தக்காளி விலை ரூ.150-ஐ தொட்டுள்ளது.

பெங்களூர் தக்காளி என்ற பெயரில் தமிழக சந்தைகளின் அதிகம் கிடைக்கும் ஆந்திர தக்காளிக்கு, தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது. ஆந்திராவின் கனமழை மற்றும் அதையொட்டிய விளைநிலங்களின் பாதிப்பு காரணமாக அங்கும் தக்காளிக்கு தட்டுப்பாடு தொடங்கியுள்ளது. குறிப்பாக தக்காளி விளைச்சலுக்கு பெயர்போன சித்தூர் மற்றும் அனந்தபூர் பகுதிகள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மாதத்தின் தொடக்கத்தை விட, தற்போது தக்காளி விலை மும்மடங்கு உயர்ந்துள்ளது. தக்காளி விலை மேலும் கூடினால், சாமானியர்களுக்கு தக்காளி விலக்கப்பட்ட கனியாகிவிடும். தமிழகத்தில் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர, மகாராஷ்டிராவின் சோலாப்பூர் பகுதியிலிருந்து தக்காளி வரத்து தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இதற்கிடையே தக்காளி பதுக்கலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், பதுக்கலை தடுக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மழை காரணமாக தக்காளி மட்டுமின்றி வெங்காயம் மற்றும் இதர காய்கனிகளின் விலைகளும் ஏறி வருகின்றன. இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர், ”உழவர் சந்தை திட்டத்தை மேம்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. சந்தையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறி உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தியானவற்றை சந்தைக்குக் கொண்டுவர வாகன ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.