சாலை விதிகளை மீறுவதில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் ஏன் தெரியுமா ?

சாலை விதிகளை மீறுவதில் தமிழகத்திற்கு 
இரண்டாவது இடம் ஏன் தெரியுமா ?

ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சாலை விபத்துகளால் அதிகம் பேர் உயிரிழப்பது இந்தியாவில்தான். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 4 லட்சத்திற்கும் அதிகமான விபத்துகள் இந்தியாவில் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு 4 லட்சத்து 64 ஆயிரத்து 910 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டு 4 லட்சத்து 67 ஆயிரத்து 44 விபத்துகளும், 2019-ம் ஆண்டு 4 லட்சத்து 49 ஆயிரத்து 2 சாலை விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. 2020-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தகவல் தெரிவிக்கிறது. சாலை விதிகளை மதிக்காதவர்களால் தான் விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் மட்டுமின்றி சாலை விதிகளை மீறுவதிலும் இந்தியர்களுக்குத்தான் முதலிடம். கடந்த ஆண்டு (2021) சாலை விதிகளை மீறுபவர்களிடம் இருந்து 1,899 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 1.98 கோடி அபராதத்தொகை ரசீதுகளை போக்குவரத்துத்துறை வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதில் அதிவேகமாக வாகனங்களை இயக்கியதற்காகத்தான் அபராத ரசீது அதிகம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. சாலை விதி மீறலில் இந்தியாவில் அதிகபட்சமாக 35 சதவிகிதத்திற்கும் அதிகமான அபராத ரசீதுகள் டெல்லி வாசிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்த இடம் தமிழகத்திற்குத்தான்! தமிழகத்தில் 36 லட்சத்து 26 ஆயிரத்து 37 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான கேரளா சாலை விதிமீறலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு 17 லட்சத்து 41 ஆயிரத்து 932 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன விதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இவற்றைக் குறைக்க வேண்டும் என்றால் வாகன விதிகளை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்றும், சாலை விதிகளைப் பற்றிய புரிதல்களை சிறு வயதிலிருந்தே ஏற்படுத்தவேண்டும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "சாலை விதிகளைக் கடைபிடிக்க வலியுறுத்தி வாரம் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, தமிழகப் போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அத்துடன் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிய வலியுறுத்தி பேரணியும் நடத்தி வருகிறோம். ஆனாலும், கல்லூரி மாணவர்கள் பெரும்பாலானோர் தலைக்கவசம் அணியாததால் சாலை விதிகளை மீறி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். மதுரையில் ஒரு நாளைக்கு 300 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. வாகனப் பெருக்கமும் விபத்திற்கும், விதிமீறலுக்கும் காரணமாக உள்ளது" என்று கூறினர்.

எஸ்.தினகரன்
எஸ்.தினகரன்

இப்பிரச்சினை குறித்து மதுரை கல்லூரி இணை பேராசிரியர் எஸ்.தினகரனிடம் பேசினோம். "இந்தியாவில் சாலை விதிமீறலில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் என்பதற்குக் காரணம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இத்தனை வழக்குகளைப் பதிய வேண்டும் என்ற முடிவோடு போக்குவரத்து காவல்துறையினர் திட்டமிட்டு தமிழகத்தில்தான் செயல்படுகின்றனர். இந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் விதிமீறல் நடக்காதா? ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அரசியல் தலையீடு காரணமாக சாலை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில் ஏற்றம், இறக்கம் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அரசியல் தலையீடு இல்லாத காரணத்தால் இந்த புள்ளி விவரக்கணக்கு பூதாகரமாகத் தெரிகிறது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in