கேரள முதல்வரின் நட்பைப் பயன்படுத்தி அணை கொள்ளளவை அதிகரிக்க வேண்டும்: ஓபிஎஸ்

கேரள முதல்வரின் நட்பைப் பயன்படுத்தி  அணை கொள்ளளவை  அதிகரிக்க வேண்டும்: ஓபிஎஸ்

கேரள முதல்வரின் நட்பைப் பயன்படுத்தி முல்லை பெரியாறு அணையின் கொள்ளவை அதிகரிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று அதிமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது அதிமுக எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “பேபி அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். அணையின் முழு அதிகாரமும் தமிழகத்திற்குதான் உள்ளது. கேரள முதல்வருடன், தமிழக முதல்வர் இணக்கமாக இருக்கிறார். இந்த நட்பைப் பயன்படுத்தி முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேசினார்.

இதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துப் பேசுகையில், "விரைவில் அணை பாதுகாப்பு சட்டம் வர உள்ளது. அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். பெரிய அணைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும், அது தொடர்பான அனைத்தையும் மேற்கொள்ள அணை பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டம் ஆபத்து வராமல் அணையைப் பராமரிக்கும் பொறுப்பை நம்மிடம் தந்துள்ளது. முல்லை பெரியாறு அணையை பாதுகாப்பதும், பராமரிப்பதும் தமிழ்நாடு அரசு தான். ஆனால், இருக்கும் இடம் என்னமோ கேரளா" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " தமிழ்நாடு - கேரளா இணைந்து சூப்பர்வைசர் குழு அமைக்க உள்ளது. சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்த பின், வேறு வழியில்லாமல் சேர்ந்துள்ளோம். இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in