பயணிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் அரசுப் பேருந்து பணியாளர்கள் டிஸ்மிஸ்!

அரசுப் போக்குவரத்துக் கழக கிளை எச்சரிக்கை
பயணிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் அரசுப் பேருந்து பணியாளர்கள் டிஸ்மிஸ்!
அரசுப் பேருந்து -மாதிரி படம்

அரசுப் பேருந்துகளில் பயணிப்போரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் போக்குவரத்து துறை பணியாளர்கள், நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கிளை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக தமிழகம் முழுக்கவுமே பல்வேறு காரணங்களால் அரசுப் பேருந்து பணியாளர்கள் செய்திகளில் அடிபட்டு வருகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை சர்ச்சைக்குரிய வகையாகவும் இருக்கின்றன. மீன் விற்று வீடு திரும்பும் பெண்மணியை பேருந்தில் அனுமதிக்க மறுத்தது, குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக குடும்பத்தினரை பேருந்திலிருந்து இறக்கி விட்டது உள்ளிட்ட நிகழ்வுகள் அவற்றில் அடங்கும்.

பொதுமக்கள் சேவைக்கான அரசுப் போக்குவரத்துக்கு அதன் பணியாளர்களே அவப்பெயர் தேடித்தந்தனர். உரிய வீடியோ ஆவணங்கள் இருந்ததால் இந்த 2 சம்பவங்களிலும், அந்த பணியாளர்கள் மீது அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கவும் முடிந்தது.

இதற்கெல்லாம் உச்சமாய், விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம், அந்த அரசுப் பேருந்தின் நடத்துநர் பாலியல் தொந்தரவு தந்திருக்கிறார். அப்பேருந்தின் ஓட்டுநர் இந்த கொடுமைக்கு உடந்தையாகவும் செயல்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் துணிச்சலான புகாரால், பேருந்து பணியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். துறைரீதியிலான நடவடிக்கையாக இருவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை பெற்று வரும் அரசுப் பேருந்துப் பணியாளர்களுக்கு, துறை சார்பில் வழிகாட்டுதல்களும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து பணிமனைகளுக்கும் இவை தொடர்பாக சுற்றறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளன.

விழுப்புரம் சம்பவம் தொடர்பாக அரசுப் போக்குவரத்து கிளை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ’கல்லூரி மாணவியிடம் நடத்துநர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது போக்குவரத்துக் கழகத்துக்கு மாபெரும் தலைக்குனிவையும், களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்துக் கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வு’ என்றெல்லாம் கவலை தெரிவித்திருப்பதுடன், ’பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் பணியாளர்கள் மீது பணிநீக்க உத்தரவு பாயும்’ என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்களின் மத்தியில், மதுரையில் அரசுப் பேருந்து ஓட்டுநரான ஆறுமுகம் என்பவர், தனக்கு மாரடைப்பு நேரிட்ட சூழலிலும், பயணிகளின் உயிர் காக்கும் நடவடிக்கையாக ஓடும் பேருந்தை ஓரமாக நிறுத்திய பிறகே இறந்திருக்கிறார். உயிர்போகும் நேரத்திலும் தனது கடமையில் கண்ணாக இருந்த ஆறுமுகமே, பெரும்பான்மையான அரசுப் பேருந்து பணியாளர்களின் பிரதிநிதியாக இருக்கிறார். அவர்களுக்கு சிறுமை சேர்க்கும் ஒருசில பணியாளர்களையும் வழிப்படுத்துவதற்கான எச்சரிக்கைகளை துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.