
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவின் தரம் குறித்த அறிக்கையை, தலைமை ஆசிரியர்கள் தினமும் சமர்ப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், ”தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் மற்றும் அளவை உறுதி செய்ய ஏதுவாக தானியங்கி கண்காணிப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சத்துணவு குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தினம் தோறும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமூக நலத்துறை ஆணையர் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அண்மையில் மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது பல்வேறு பள்ளிகளில் ஏஎம்எஸ் அமைப்பு மூலம் தினசரி சத்துணவு அறிக்கையை தலைமை ஆசிரியர்கள் முறையாக மாவட்ட சமூக நலத்துறைக்கு அனுப்பாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனவே இதில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏஎம்எஸ் அமைப்பு மூலம் சத்துணவு அறிக்கையை குறுஞ்செய்தியாக தினமும் காலை 11 மணிக்குள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!
துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!
1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!
ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?
பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?