காதை கிழிக்கும் ஹை டெசிபல் ஹாரன்: தமிழக அரசு அதிரடி முடிவு

ஹாரன் அகற்றம் (கோப்புப் படம்)
ஹாரன் அகற்றம் (கோப்புப் படம்)

பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்தை சீரமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காதை கிழிக்கும் ஹாரன் சத்தத்திற்கு முடிவு கட்டும் வகையில் ஒரு புதிய அதிரடி நடவடிக்கையை தமிழக போக்குவரத்துக்கு கழகம் கொண்டு வர உள்ளது. பல வாகனங்களில் அளவுக்கு அதிகமாக சத்தத்தை தரும் மின்னணு ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றால், ஒலிமாசு அதிகமாவதோடு, சாலைகளில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல்

குறிப்பாக, முதியவர்கள், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் இந்த, காதைக்கிழிக்கும் ஹாரன் சத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு ஹாரன்கள், 80 டெசிபல் அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அரசு கட்டுப்பாட்டு வாரிய சட்ட விதியாகும். ஆனால், இந்த விதிமுறைகளை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. அதிலும் இளைஞர்கள் மதிப்பதே இல்லை. பலரும் 100 டெசிபல் அளவுக்கு மேலே ஒலி எழுப்பும் ஹாரன்களை தங்கள் வண்டிகளில் பொருத்தியிருக்கிறார்கள்.

ஹாரன் சத்தம்
ஹாரன் சத்தம்

இதுதொடர்பாக, பொதுமக்களிடம் இருந்தும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பிலும் ஏகப்பட்ட புகார்கள் குவிந்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக போக்குவரத்துத் துறை, மீண்டும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் உள்ள அரசு, தனியார், ஆம்னி பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு, போக்குவரத்து ஆணையரகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல்

பேருந்துகள் உள்ளிட்ட இதர வாகனங்களுக்கு ஆண்டுதோறும் எஃப்சி எனப்படும் தகுதிச்சான்று வழங்கும்போது, ஒலி மாசு ஏற்படுத்தும் ஹாரன் இருந்தால் அதனை அதிகாரிகள் உடனடியாக அகற்றிவிடுவார்கள். ஆனால், எஃப்சி பெற்ற பிறகு வாகன உரிமையாளர்கள் மீண்டும் தங்களுக்கு வசதியான, எலக்ட்ரானிக் ஹாரன்களை பொருத்தி கொள்வதாக கூறப்படுகிறது.

வாகன சோதனை மையம்
வாகன சோதனை மையம்

ஆனால், இனி இப்படி எல்லாம் ஏமாற்ற முடியாது என்ற நிலை வந்துள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள வட்டார போக்குவரத்து அதிகாரிகள், அவர்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து வகை பேருந்து மற்றும் வாகனங்களிலும் சோதனைகளை மேற்கொள்வார்கள். அதிக டெசிபல் உள்ள ஹாரன்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அங்கேயே அகற்றப்படும். அத்துடன், அந்த பேருந்து உரிமையாளர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்துத் துறையின் இந்த அதிரடி உத்தரவும், உடனடியாக அபராதமும், பொதுமக்களுக்கு நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in