வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு ரூ.500 கோடி, பேரிடர் எச்சரிக்கை அமைப்புக்கு ரூ.10 கோடி #TNBudget2022

வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு ரூ.500 கோடி, பேரிடர் எச்சரிக்கை அமைப்புக்கு ரூ.10 கோடி #TNBudget2022

கடந்த சில ஆண்டுகளாகச் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்கள் கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படுவது அங்கு வாழும் மக்களை அல்லலுறச் செய்கிறது. இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், சென்னை பெருநகர்ப் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு, தக்க பரிந்துரை வழங்க ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகத் தனது பட்ஜெட் உரையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

இக்குழுவின் பரிந்துரைகளின்படி, வெள்ளத்தடுப்புப் பணிகள் முதற்கட்டமாக 1,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைச் சுட்டிக்காட்டிய நிதியமைச்சர், இப்பணிகளுக்காக இந்த ஆண்டு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.

“வானிலையைத் துல்லியமாகக் கணிக்க பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தை அண்மையில் சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு நமக்கு உணர்த்தியிருக்கிறது” என்று குறிப்பிட்ட அவர், பேரிடர் தாக்கும் முன் உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேக கணினிகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட ஓர் அமைப்பை அரசு உருவாக்கும் எனக் கூறிய அவர், இப்பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக, நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பிலிருந்து அரசு நிலங்களை மீட்கவும் பராமரிக்கவும் சிறப்பு நிதியாக, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.