
புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் 1,109 கோடி ரூபாய் செலவில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாகத் தரமுயர்த்தப்படும் என்றும் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, ‘தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம்’ என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்தப்படும் என்றும் எனத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக முதற்கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசு நிர்வகித்துவரும் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் விரிவாக்கப் பணிகள், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கி மற்றும் தேசிய சுகாதார இயக்க நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். 1969-ல் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை 290 படுக்கைகளுடன் இயங்கிவந்தது. 120 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை தற்போது விரிவுபடுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய தன்னாட்சி அதிகாரம் பெற்ற மருத்துவமனையாக இந்த மருத்துவமனை தரமுயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்ஜெட்டில், தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்துக்கு 1,906 கோடி ரூபாயும், அவசர ஊர்தி சேவைகளுக்கு 304 கோடி ரூபாயும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்துக்கு 817 கோடி ரூபாயும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு 1,547 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறைக்கு மொத்தம் 17,901.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.