சட்டப்பேரவையில் இன்று `நீட்' விலக்கு மசோதா நிறைவேற்றம்!

நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஏற்பாடு
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இன்று நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்படுகிறது. இந்த மசோதா ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வில் விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவை 4 மாத தாமதத்திற்கு பின்னர் ஆளுநர் அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக இருப்பதாக ஆளுநர் விளக்கம் அளித்திருந்தார். இந்த விவகாரம் தமிழக மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை கடந்த 5ம் தேதி கூட்டினார்.

அப்போது, சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்புவது என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளை நேரலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in