மாநில உரிமைகளுக்கான சந்திப்பு இது: டெல்லி பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மாநில உரிமைகளுக்கான சந்திப்பு இது: டெல்லி பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம்

டெல்லியில் நாளை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ள நிலையில், திமுக தொண்டர்களுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பெருமித மடல். 'வானத்தில் சிறகடிக்கும் பறவை எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அது தன் கூட்டுக்குத் திரும்பும்போதுதான் பெரும் மகிழ்ச்சி கொள்ளும். பாடுபட்டுச் சேகரித்து வந்த இரையைத் தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவதில்தான் பறவைக்குப் பேருவகை!

அமீரகப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அடுத்த பயணம் இந்திய ஒன்றியத்தின் தலைநகராம் புதுடெல்லியை நோக்கி அமைகிறது. டெல்லிக்குச் சென்று, மார்ச் 31 அன்று பிரதமர் நரேந்திர மோடியையும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கவிருக்கிறேன். தொடர்ந்து, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்கவிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் கழக அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தர வேண்டிய வரி வருவாய், மழை - வெள்ள நிவாரணத் தொகை உள்ளிட்ட நம்முடைய மாநில உரிமைகளுக்கான சந்திப்பு இது. அதனைத் தொடர்ந்து இந்திய அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு இருக்கிறது. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, டெல்லிப் பட்டணத்தில் திராவிடக் கோட்டையாக உருவாகியுள்ள கழக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் ஏப்ரல் 2-ம் நாள் திறக்கப்படுகிறது.

ஏப்ரல் 2-ம் நாள் நடைபெறும் திறப்பு விழாவில் பங்கேற்றிட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தலைவர் கலைஞர் மீது அளவற்ற மரியாதை கொண்டவருமான சோனியா காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள், சமூகநீதியை நிலைநாட்டப் பாடுபடும் கட்சிகளின் தலைவர்கள், மதச்சார்பற்ற கொள்கையில் உறுதிகொண்ட தலைவர்கள் உள்ளிட்ட பலரும் திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்கள்.

இந்திய ஒன்றிய அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கொள்கைகளை செயல்வடிவமாக்கும் திராவிட மாடலும் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன. அதன் அழுத்தமான அடையாளம்தான் டெல்லியில் திறக்கப்படும் அண்ணா - கலைஞர் அறிவாலயம். இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். தெற்கின் வரலாற்றை டெல்லிப்பட்டணத்தில் எழுதும் பெருமிதமிகு நிகழ்வு ஏப்ரல் 2 அன்று நடைபெறுகிறது. உடன்பிறப்புகளாகிய உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உவகை அடைகிறேன்; பெருமை கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.