ஆவடி ரயில் விபத்துக்கு காரணம் இதுதான்... வெளியானது அதிர்ச்சி தகவல்!

ஆவடி ரயில் விபத்துக்கு காரணம் இதுதான்... வெளியானது அதிர்ச்சி தகவல்!

சென்னை ஆவடி அருகே ரயில் தடம்புரண்ட விபத்துக்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர் பணிமனையில் இருந்து இன்று அதிகாலையில் ஆவடி ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்துக்கொண்டிருந்தது. ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில், சிக்னலை கடந்து சென்றது. இதனால் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு இருப்புப் பாதையை விட்டு விலகிச் சென்று விபத்திற்குள்ளானது. பணிமனையில் இருந்து புறப்பட்ட ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் சென்னை நோக்கி வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னை நோக்கி செல்லும் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆவடி அருகே ரயில் தடம் புரண்ட விபத்துக்குள்ளான இடத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ரயில் தடம்புரண்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹைட்ராலிக் ஜாக்கிகளை வைத்து ரயில் பெட்டிகளை தண்டவாளத்துக்கு கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகின்றனர். ரயில்வே ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆவடி அருகே ரயில் தடம்புரண்ட விபத்துக்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம். ரயில் பெட்டிகளை தடம் புரண்டதன் காரணமாக 6 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in