இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை ஆவணப்படுத்த வேண்டும்!

ஆளுநர் உரைக்குப் பின் மீனவர் சங்கம் கோரிக்கை
சட்டப்பேரவையில் உரைநிகழ்த்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி
சட்டப்பேரவையில் உரைநிகழ்த்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரையாற்றும்போது மீனவர் குறித்தும் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது இந்த அரசின்முக்கியக் குறிக்கோளாகும். தற்போது இலங்கையில் காவலில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 68 மீனவர்களையும் 75 மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். தொடர்ந்து ஏற்படும் இந்நிகழ்வுகளுக்கு சுமுகமான தீர்வுகாண இருநாட்டு மீனவர்களிடையே நேரடி பேச்சுவார்த்தை தொடங்க ஆவன செய்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.

இயற்கைச் சீற்றங்களிலிருந்து நமது மீனவர்களைப் பாதுகாக்க, தடையில்லா தகவல் தொடர்பு அமைப்புகளை வழங்க மாநிலத்தில் உள்ள அனைத்து இயந்திரப் படகுகளிலும் தகவல் தொடர்பு கருவிகளை நிறுவ, இந்த அரசு திட்டமிட்டுள்ளது. மீன்பிடி குறைவு காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித்தொகை குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டில்1.22 லட்சம் மீனவர் குடும்பங்களுக்கு 74 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது” என்று ஆளுநர் கூறினார்.

ஆளுநர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போதே, இலங்கை கடற்படை கைது செய்திருந்த 68 மீனவர்களில், கடந்த டிச.12-ம் தேதி சிறை பிடிக்கப்பட்ட மண்டபம் பகுதி மீனவர்கள் 13 பேரை விடுதலை செய்ய இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் 2 விசைப்படகுகளை திருப்பி வழங்குமாறு கடற்படைக்கு உத்தரவிட்டதாகத் தகவல் வெளியானது.

தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத் தலைவர் ஜெ.கோசுமணி
தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத் தலைவர் ஜெ.கோசுமணி

இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத் தலைவர் ஜெ.கோசுமணி கூறும்போது, “பல்வேறு அரசியல் நடவடிக்கைகளின் வழியே இந்த கச்சத்தீவு விவகாரத்தில் நமது மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது. ஆளுநர் உரையின்படி பார்த்தால், இரு நாட்டு மீனவர்களிடையே நடத்தப்படும் பேச்சுவார்த்தையானது முழுக்க முழுக்க அரசு வழியே ஆவணப்படுத்தப்படும் பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும். ஏற்கெனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் போல் இருக்கவே கூடாது. மேலும் நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் முடிவானது நாம் இழந்த கச்சத்தீவில் நமது மீனவர்கள் தாராளமாக மீன்பிடிக்கலாம், மீன் உலர்த்தலாம், மீன்பிடி வலைகளையும் உலர்த்தலாம், கோயிலுக்குச் சென்றுவரலாம் என்ற உரிமைகளை மீட்பதாக இருக்கவேண்டும்.

மீன்பிடி குறைவு காலத்தில் மீனவர்களுக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்களே... அதைவிடுத்து ரூ.6 ஆயிரம் சிறப்பு உதவித்தொகைதானே வழங்கினார்கள். அந்தக் கணக்கைத்தானே ஆளுநர் சொல்லியிருக்கிறார். திமுகவின் தேர்தல் வாக்குறுதியான ரூ.8 ஆயிரம் உதவித்தொகையை உடனே வழங்கிடக் கோருகிறோம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in