ஆளுநரின் காரை நோக்கி பாய்ந்த கருப்புக்கொடி... தடுத்து நிறுத்தியது போலீஸ்

மயிலாடுதுறையில் கொந்தளித்த கட்சிகள்
ஆளுநரின் காரை நோக்கி பாய்ந்த கருப்புக்கொடி... தடுத்து நிறுத்தியது போலீஸ்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழகத்தில் முதன் முதலாக மயிலாடுதுறையில் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதல் தமிழகத்தின் பிரதான கட்சிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதற்கேற்றார் போல ஆளுநரும் திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் செயல்படுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நீட் விலக்கு மசோதா, 7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய கோப்புகள் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.

இதன் காரணமாக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கின்றனர். திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி, ஆளுநரை ஒவ்வொரு நாளும் கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆனாலும் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி உள்ளிட்ட போராட்டங்கள் எதுவும் இதுவரை தமிழ்நாட்டில் நடைபெறவில்லை.

இந்த நிலையில் ஆளுநருக்கு எதிராக முதன் முறையாக மயிலாடுதுறையில் இன்று கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்த ஆளுநருக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தின. ஆர்எஸ்எஸ் கொள்கையை தமிழ்நாட்டில் பரப்ப நினைக்கும், தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கைகளுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநருக்கு இந்த கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் கலந்து கொள்வதற்காக தருமபுரம் ஆதீனகர்த்தர் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்று ஞான யாத்திரை புறப்படுகிறார். அதனை தமிழக ஆளுநர் ரவி தொடங்கி வைக்க சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் வருவதற்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு, தமிழர் உரிமை இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. தருமபுரம் ஆதீனத்திற்கு அவரை அழைக்கக் கூடாது என்று ஆதீனகர்த்தருக்கும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி ஆளுநர் இன்று காலை தருமபுரம் ஆதீனத்திற்கு வந்திருந்து யாத்திரை துவக்கம், புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் சார்பில் மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கல்லூரி எதிரில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுப்பதற்காக 200க்கும் மேற்பட்ட போலீஸார் மயிலாடுதுறை தருமபுரம் திருக்கடையூர் உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர்.

தருமபுரம் ஆதீனத்திற்கு செல்வதற்கு முன்பாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குச் சென்று ஆளுநர் அங்கு வழிபாடு செய்தார். வழிபாட்டிற்குப் பிறகு அங்கிருந்து கிளம்பிய ஆளுநர் ரவி, மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வழியாக கடந்து சென்றார். அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் அவர்களை மறைக்கும் வகையில் காவல்துறையினரின் வாகனங்களைக் கொண்டு வந்து அவர்களுக்கு எதிரே நிறுத்தி அவர்களை ஆளுநர் பார்க்காத வண்ணம் ஏற்பாடு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ஆளுநரின் காரை நோக்கி தங்கள் கைகளில் வைத்திருந்த கருப்புக்கொடி கட்டிய கம்புகளை வீசி எறிந்தனர். ஆனால் அதற்குள் ஆளுநரின் கார் அந்த இடத்தை விட்டு கடந்து விட்டது. அவர்கள் வீசிய கம்புகளை போலீஸார் மறித்துப் பிடித்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தமிழக அரசுடன் ஆளுநருக்கு கருத்து வேற்றுமை ஏற்பட்டு, அதன் விளைவாக மோதல் போக்கு நிலவும் நிலையில், ஆளுநருக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டில் துவங்கியிருப்பது இனிவரும் காலங்களில் அவருக்கு எதிரான போராட்டங்கள் மேலும் வலுப்பெறும் என்பதற்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in