சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன உருக்கமான உண்மை சம்பவம்!

சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன உருக்கமான உண்மை சம்பவம்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்து மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவ சங்கர், பெண்களுக்கு வழங்கப்படும் இலவச பேருந்து பயணம் குறித்து உருக்கமாக ஒரு உண்மை சம்பவத்தை கூறினார்.

"இலவச பேருந்து பயணம் என்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாதது. எங்களுக்கு இலவச பயணம் வேண்டும் என்று யாரும் முதல்வரிடம் கோரிக்கை வைக்கவில்லை. யாரும் போராட்டம் நடத்தவில்லை. ஆனால், இந்த திட்டத்தை கொடுத்தால் மகளிர் வாழ்வில் ஏற்றம் வரும். அவர்களது வாழ்வு வளம்பெரும் என்கிற காரணத்தில்தான் முதல்வர் இந்த திட்டத்தை கொண்டு வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னுடைய குன்னம் தொகுதியில் இருக்கிற வேப்பூர் அரசு கலைக்கல்லூரி விழாவுக்கு சென்றிருந்தேன். வரவேற்புரை நிகழ்த்திய அந்த கல்லூரியின் முதல்வர், போகும்போதே சென்னார், நான் முதல்வருக்கு நன்றியை சொல்லி இந்த பேச்சைத் தொடங்கிறேன் என்றார். கல்லூரி முதல்வரின் பெண் உறவினர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. நன்கு படித்த பெண். திருமணமான இடத்திற்கு சென்ற இரண்டு மாதத்திலேயே வரதட்சணை கொடுமை. இந்த வரதட்சணை கொடுமை காரணமாக மிகவும் வேதனைப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடித்து, கையில் இருந்த செல்போனை எடுத்து அவரது தந்தையிடம் பேசினாராம். அப்பா, எனது வாழ்க்கை கடைசி கட்டத்துக்கு வந்துள்ளது. என்னை காப்பாற்றுவதற்கே வழியில்லை.

இங்கிருந்து நான் எப்படி வீட்டிற்கு வருவது. நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறியிருக்கிறார். அப்போது, அந்த பெண்ணின் தகப்பனார் சொன்னாராம், நீ ஒண்ணும் கவலைப்படாதே. வீட்டை விட்டு வெளியே வா, வர்ற டவுன் பஸ்சில் ஏறு. முதல்வர் வழங்கியிருக்கிற இந்த இலவச பயணம் திட்டம் உன்னை காப்பாற்றும், நீ வீடு வந்து சேரலாம் என்று கூறியுள்ளார். அந்த பெண்ணும் வீடு வந்து சேர்ந்துள்ளார், அவர் உயிர் காப்பாற்றப்பட்டார் என்று அந்த கல்லூரி முதல்வர் சொன்னார். இது உண்மையில் நடந்த சம்பவம். 1500 பேர் நிரம்பியிருந்த மண்டபத்தில் பதிவு செய்த அந்த வார்த்தையை இந்த மன்றத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த திட்டம் உயிர் காக்கும் திட்டம் மட்டுமல்ல பெண்களுடைய வாழ்க்கைக்கு எப்படி பெரியார் அவர்கள், சொத்தில் சமபங்கு வேண்டும் என்று 1924-ல் கோரிக்கை வைத்து 1989-ல் கலைஞர் நிறைவேற்றி காட்டினாரோ, அதேபோல் உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தாரோ, அரசு வேலை வாய்ப்பில் 30 சதவீதம் கொண்டு வந்தாரோ, அதேபோல் தற்போது முதல்வர், பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக ஆயிரம் ரூபாய் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதுதான் சமூக நீதிக்கான அரசு. திராவிட மாடல் அரசு" என்று கூறினார்.

Related Stories

No stories found.