மகாமகம் துவங்கி வைகை வரை தொடரும் சோகம்!

மகாமகம் துவங்கி வைகை வரை தொடரும் சோகம்!

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சித்திரைத்திருவிழாவின் போது வைகை ஆற்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, மதுரை மாவட்டம், செல்லூரைச் சேர்ந்த ஜெயலெட்சுமி என்ற மூதாட்டியும், தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்வமும் உயிரிழந்தனர், இந்த நெரிசலில் பத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக ஆளுங்கட்சி புகார் கூறுகிறது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் கோயில் விழாக்களில் அந்தந்த பகுதி மக்கள் மட்டுமின்றி அதையொட்டி கிராமமக்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது. ஆனால், தமிழகத்தின் முக்கியமான விழாவான மதுரை சித்திரைத்திருவிழாவில் இவ்வளவு கூட்டம் திரளும் என எதிர்பார்க்கவில்லையென அரசு தரப்பில் சொல்லப்படுவது நம்பும்படி இல்லை. ஏனெனில், கடந்த கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரைத்திருவிழா நடைபெறவில்லை.

இதன் பின் நடைபெற்ற திருவிழா என்பதால் தென் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இதற்குப்போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாததே இந்த விபத்திற்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

தமிழகத்தில் கோயில் விழா கூட்டங்களில் சிக்கி பக்தர்கள் உயிரிழப்பது இது முதல் முறையல்ல. 1992 பிப்ரவரி 18-ல் கும்பகோணம் மகாமக திருவிழா நடைபெற்றது. மகாமக குளத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுடன் புனித நீராடினார். அவர்கள் ஆகம விதிகளை மீறுவதாக எழுந்த சர்ச்சையை புறந்தள்ளி இவ்விழா நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடிய அந்தக்குளத்தின் ஒரு பகுதியை இவர்கள் இருவருக்கும் குளிப்பதற்கு ஒதுக்கியதால் சர்ச்சையும் ஏற்பட்டது. ஜெயலலிதா மகாமகம் வருகிறார் என்ற தகவல் அறிந்து அவரைப் பார்க்க ஏராளமானோர் திரண்டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த காவல்துறை தடியடி நடத்தியது. இதனால் தப்பியோடிய பக்தர்கள் பலர் நீருக்குள் விழுந்தனர். நீரில் மூழ்கியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் 48 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை இதை விட அதிகம் இருக்கும் என்ற குற்றச்சாட்டு இன்றுவரை தொடர்கிறது. மகாமகம் என்றவுடன் வரலாற்றில் மறையாத வடுவாக 48 பேர் உயிரிழந்த சம்பவம் தான் இன்றும் நினைவிற்கு வருகிறது. இதன் பின்னும் பல கோயில் விழாக்களில் உயிரிழப்புகள் நடந்துள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் சித்ரா பெளர்ணமி விழா முடிந்த மூன்றாம் நாளில் பக்தர்களுக்கு பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் சில்லறைக் காசுகள் பக்தர்களுக்கு பிடிக்காசாக வழங்கப்படும். இதை வாங்கச் சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் பலியானார்கள். இதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருவண்ணாமலையில் பால்குடம் எடுத்துச் செல்லும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். கடந்த 2020 பிப்ரவரி மாதம் கோவையில் உள்ள மருதமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். கோயில் விழாக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் விவரங்கள் பெரிதாக வெளியே வருவதில்லை.

தமிழகம் முழுவதும் ஆண்டு தோறும் கோயில் விழாக்கள் கோலாகலமாக நடந்து வருகின்றன. அதில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் தொடர்கின்றன. ஒரு மாவட்டத்திற்கு தமிழக ஆளுநர் வருகிறார் என்றால், ஆயிரக்கணக்கான காவலர்களைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் தமிழக காவல்துறை, மக்களின் கலாச்சாரம் சார்ந்து நடக்கும் சித்திரைத் திருவிழா போன்ற பெரிய விழாக்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவது அவசியம். ஒற்றை ஆளுநருக்குக் காட்டும் பாதுகாப்பு கெடுபிடியை லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் திருவிழாவின் போதும் காட்டினால் தான், உயிரிழப்புகள் நடைபெறுவதைத் தடுக்க முடியும் என்பது தான் பொதுமக்களின் கருத்தாக உள்ளது. ஆனால், அதற்குப் பதில், அவர்கள் ஆட்சியின் போது நடக்கவில்லையா என லாவணி செய்யாமல், மாநில அளவில் நடக்கும் பெரிய திருவிழாக்கள் குறித்து தமிழக அறநிலையத்துறை அமைச்சர், தமிழக காவல்துறை தலைவர் இணைந்து பேசி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது தான் மதுரை சித்திரைத் திருவிழா சம்பவம் சொல்லியிருக்கிற சேதியாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in