முதல்வர் ஸ்டாலினுக்கு விருந்து அளிக்கின்றனர் நரிக்குறவர் மக்கள்

முதல்வர் ஸ்டாலினுக்கு விருந்து அளிக்கின்றனர் நரிக்குறவர் மக்கள்

சென்னை ஆவடியில் உள்ள நரிக்குறவர் காலனிக்கு வரும் 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அவருக்கு அந்த சமூக மக்கள் விருந்தளிக்க உள்ளனர்.

அனைவரும் சமம், அனைவருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த அஸ்வினி என்ற பெண் அங்குள்ளவர்களால் துரத்தப்பட்டார். இந்த தகவல் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் காதில் விழ, உடனடியாக நரிக்குறவர் சமூகப் பெண் அஸ்வினி மட்டுமின்றி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இது பேசும் பொருளான நிலையில், அந்த மக்களின் இல்லங்களுக்கே சென்று இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். அவர்களுக்கு பட்டா வழங்கியதுடன், அடிப்படை தேவைகளை செய்துக் கொடுத்தார்.

இந்நிலையில், சென்னை ஆவடியை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மாணவிகள் திவ்யா, ப்ரியா, தர்ஷினி ஆகியோரை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, தங்கள் ஊருக்கு வர வேண்டும் என்றும் எங்கள் படிப்புக்கு தந்தையைப் போல் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மாணவிகளின் இந்த கோரிக்கையை கேட்டு நெகிழ்ந்துபோன முதல்வர், உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், "தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. திவ்யா, ப்ரியா, தர்ஷினி என நமது தகுதியும் திறமையும் யாருக்கும் சளைத்ததல்ல. நாம் முன்னேறி வருகிறோம்; தடைக்கற்களை உடைத்து திராவிட மாடலில் நாம் செதுக்கும் சிற்பங்கள் உயர்ந்து விளங்கும்" என்று கூறியிருந்தார்.

இதனிடையே, யாரும் எதிர்பார்க்க நிலையில் ஆவடியில் உள்ள நரிக்குறவர் சமூக பெண்கள், மாணவிகளிடம் வீடியோ காலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஒரு வாரத்தில் ஆவடி நரிக்குறவர் காலனிக்கு நேரில் வருவதாக உறுதியளித்த முதல்வரிடம், தங்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். நிச்சயம் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார். இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார். இந்தநிலையில், சென்னை ஆவடியில் உள்ள நரிக்குறவர் காலனிக்கு வரும் 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அவருக்கு அந்த சமூக மக்கள் விருந்து அளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர். முதல்வரின் வருகையை எதிர்பார்த்து நரிக்குறவர் சமூக மக்கள் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.