`உங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும்'- மகளை மருத்துவம் படிக்க வைத்த பெண்ணுக்கு நம்பிக்கையளித்த முதல்வர்

முதல்வர் மற்றும் ஆட்சியருடன் ரமணி குடும்பத்தினர்
முதல்வர் மற்றும் ஆட்சியருடன் ரமணி குடும்பத்தினர்

மீன் வெட்டி சுத்தம் செய்துகொடுத்து சம்பாதித்த பணத்தில் மகளை மருத்துவம் படிக்க வைத்த தாயையும், மருத்துவம் படுத்த அவரது மகளையும் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மயிலாடுதுறை நகராட்சி மீன் மார்க்கெட்டில் மீன்களை நறுக்கி, சுத்தம் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ரமணி. கணவனை இழந்த ரமணிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தனது மகன் மற்றும் மகளை மார்க்கெட்டில் மீன்களை நறுக்கி, சுத்தம் செய்து கொடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து வளர்த்து வருகிறார்.

ரத்த நாள குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மகன் ரவிச்சந்திரன் பத்தாம் வகுப்பு வரை படித்த நிலையில் வீட்டில் இருந்து வருகிறார். மகள் விஜயலட்சுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த நிலையில் அவரை மருத்துவம் படிப்பதற்காக ரஷ்யாவுக்கு அனுப்பினார். படிப்புச் செலவுகளுக்காக தன்னுடைய அன்றாட வருமானம் முழுவதையும் செலவழித்த ரமணி, அடுத்ததாக சொந்த வீடு, நகைகள் அனைத்தையும் விற்று மருத்துவ படிப்பை முடிக்க வைத்திருக்கிறார்.

விஜயலட்சுமிக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின்
விஜயலட்சுமிக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின்

இந்த தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில் இன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்திருந்த முதல்வர் ஸ்டாலின், இது குறித்து கேள்விப்பட்டு அவர்களை சந்திக்க விரும்பினார். அதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, அந்த குடும்பத்துக்கு தகவல் தெரிவித்து அவர்களை திருக்கடையூருக்கு அழைத்துவரச் செய்தார்.

அங்குள்ள தமிழ்நாடு ஹோட்டலில் குடும்பத்துடன் வந்திருந்த ரமணியை சந்தித்த முதல்வர் இருவருக்கும் தனித்தனியாக வாழ்த்துகளை தெரிவித்தார். விஜயலட்சுமிக்கு கைகொடுத்து வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், விஜயலட்சுமிக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று நம்பிக்கை கொடுத்தார். முதல்வரின் சந்திப்பும், வாழ்த்தும் அந்த குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in