நாளை முதல் மறக்காமல் கையில் குடை எடுத்துச் செல்லுங்கள்!

நாளை முதல் மறக்காமல் கையில் குடை எடுத்துச் செல்லுங்கள்!

நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று 14 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெறும் மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 15 செமீ மழையும், ஆலங்குடி, கோயம்புத்தூர் தெற்கு, ஓமலூர், பாலக்கோடு, சின்கோனா, வால்பாறை, ஆகிய பகுதிகளில் குறைந்த பட்சமாக தலா 1 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், இன்று முதல் 5 நாட்களுக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, ஈரோடு, கரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல ஆகஸ்ட் 1மற்றும் 2-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மேற்கு மாவட்டங்களில் பல இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதியன்றும் இதே நிலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்று, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளைய தினம் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை முதல் ஆகஸ்ட் 3 ம் தேதி வரைக்கும் லட்சத்தீவு பகுதிகள், கேரள, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in