அடுக்கடுக்கான குற்றச்சாட்டு: தமிழக ஆளுநரின் விருந்தை புறக்கணித்தது முக்கிய கட்சிகள்!

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு: தமிழக ஆளுநரின் விருந்தை புறக்கணித்தது முக்கிய கட்சிகள்!

தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கவிருக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அறிவித்துள்ளன.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்பதற்கு முன்பே அவருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதையும் மீறி தமிழக ஆளுநராக ரவி நியமிக்கப்பட்டார். இதனிடையே நீட் விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட மசோதாவை 142 நாட்களுக்கு பிறகு திரும்பி அனுப்பினார் ஆளுநர். இதைத் தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதையும் ஆளுநர் இன்று வரை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கவில்லை.

ஆளுநரின் இந்த செயல்பாடு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கவிருக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக சட்டப்பேரவையின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்சினை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் எங்களது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்பதிலை" தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் சித்திரை நாள் தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாகவுள்ளது. நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் கடத்தும் நிலையில் அவர் அழைப்பை எங்ஙனம் ஏற்க இயலும்? சனாதனக் கருத்தியலின் பரப்புநராகச் செயல்படும் ஆளுநர், சமூகநீதிக் கருத்தியலைச் சிதைக்கும் வகையில்தான் ஏற்கெனவே நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பினார். அடுத்து நிறைவேற்றப்பட்ட அதே மசோதாவை இன்னும் கிடப்பில் போட்டிருக்கிறார். இந்நிலையில் அவரது அழைப்பை எவ்வாறு ஏற்க இயலும்?

எனவே, ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆளுநரின் சித்திரை நாளுக்கான தேநீர் விருந்து அழைப்பை விசிக புறக்கணிக்கிறது. இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.