சிறைக்குப் போகணுமா?... போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட நீதிபதி!

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை வழங்க போதுமான நிதி இல்லை என்றால் பேருந்துகளை விற்று பணம் கொடுக்க வேண்டியது தானே என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

அரசு பேருந்துகள்
அரசு பேருந்துகள்

மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கனகசுந்தர், உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு 1.04.2014 முதல் 31.01.2017 வரை வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதிய நிலுவை தொகை இதுவரை வழங்கப்படவில்லை. அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. 

இது தொடர்பாக 2016-ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு போக்குவரத்து கழக தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த  குறைந்தபட்ச ஊதிய விகிப்படி 6 மாதத்தில் ஊதிய நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிடப்பட்டது. 

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று  கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு போக்குவரத்து கழக முன்னாள் மேலாண் இயக்குநர் ஆறுமுகம், முன்னாள் மேலாண் இயக்குநர் முருகேசன், பொதுமேலாளர் இளங்கோவன், முன்னாள் பொது மேலாளர் ராஜேஸ்வரன் (ஓய்வு) ஆகியோர் நேரில் ஆஜராகினர். 

இதையடுத்து நீதிபதி, 'உயர் நீதிமன்றம் 2016-ல் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் இதுவரை நிறைவேற்றவில்லை. தற்காலிக ஊழியர்கள் அதிகாரிகளிடம் பிச்சை கேட்கவில்லை. செய்த பணிக்கு உரிய ஊதியம் மட்டுமே கேட்கின்றனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுநர்களும், நிரந்தர ஓட்டுநர்களும் பேருந்துகளை இயக்குவதில் வேறுபாடு இல்லை. இரு பணியாளர்களும் பொதுமக்களுக்காகவே பணிபுரிகின்றனர். 

இருவரும் ஒரே மாதிரி தான் பேருந்துகளை இயக்குகின்றனர். ஆனால், தற்காலிக பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாடு உள்ளது. முறையாக பணி செய்தவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்காமல் கால தாமதம் செய்வதை ஏற்க முடியாது. ஊதிய நிலுவை வழங்க நிதி பற்றாக்குறையை காரணமாக கூறுவதை ஏற்க முடியாது. 

போதுமான நிதி இல்லை என்றால் 5 பேருந்துகளை விற்று பணத்தைக் கொடுக்க வேண்டியது தானே? நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்க வேண்டாம். நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என நினைக்க வேண்டாம். 

நீதி வழங்குவதற்காக நீதிமன்றம் எப்போதும் இயங்கும். விடுமுறை நாட்களில் கூட நீதிமன்றங்கள் முக்கிய வழக்குகளை விசாரிக்கின்றன. 

அதுபோலவே போக்குவரத்து துறையில் பொதுமக்களுக்காக அனைத்து நாட்களும் பேருந்துகளை இயக்குகின்றனர். அவர்களுக்கு ஊதியம் வழங்க மறுப்பது, தாமதம் செய்வது நல்ல செயல் அல்ல.  நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப நேரிடும். நீதிமன்ற உத்தரவுகளை மதித்து அதனை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். 

நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை என்பது நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றுவதில் தான் உள்ளது. விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது' என்று  தனது உத்தரவில் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in