பூமிநாதன் படுகொலை: போலீஸாரின் கோபம் தீர்த்த டிஜிபி சைலேந்திரபாபு

பல வினாக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்
பூமிநாதன் படுகொலை: போலீஸாரின் கோபம் தீர்த்த டிஜிபி சைலேந்திரபாபு
பூமிநாதன் இல்லத்தில் அஞ்சலி செலுத்தும் சைலேந்திரபாபு

திருச்சி, நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவிஆய்வாளர் பூமிநாதன் ரோந்துப்பணியின்போது, ஆடுதிருடர்களால் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீஸாருக்கு இருந்துவந்த கோபத்தையும், குழப்பத்தையும் நேரில் சென்றதன் மூலம் தீர்த்து வைத்திருக்கிறார் டிஜிபி சைலேந்திரபாபு. அதேநேரத்தில், இனி போலீஸார் ரோந்துப்பணிக்குச் செல்லும்போது துப்பாக்கியுடன் செல்லவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பூமிநாதன் குடும்பத்தினருக்கு ஆறுதல்
பூமிநாதன் குடும்பத்தினருக்கு ஆறுதல்

தமிழக காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு இன்று(நவ.23) காலை, பூமிநாதனின் இல்லத்துக்குச் சென்று அவரது புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ’’மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் விவேகமான முறையில் பணியாற்றக் கூடியவர். பூமிநாதன் முதலமைச்சர் பதக்கத்தையும் வென்றுள்ளார். ஆடு திருடர்களை 15 கி.மீ தூரம் விரட்டிச்சென்று பிடித்த பூமிநாதன், அவர்கள் சிறுவர்கள் என்பதால் கனிவுடன் நடந்துகொண்டுள்ளார். அந்த நேரத்திலும் கொலையாளியின் தாயாருக்கு போன் செய்து சிறுவர்கள் குறித்து அறிவுரை வழங்கியுள்ளார்.

இனி, போலீஸார் ரோந்துப் பணிக்குச் செல்லும்போது துப்பாக்கியுடன் செல்லவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். காவல் துறையின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துகிறவர்கள் மீது தற்காப்புக்காக ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என போலீஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று சைலேந்திரபாபு தெரிவித்தார். பின்னர், நவல்பட்டு காவல் நிலையத்தை ஆய்வு செய்தவர், விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்த தனிப்படை போலீஸாருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

பூமிநாதன் இல்லத்தில்..
பூமிநாதன் இல்லத்தில்..

குழப்பம், கோபம் தீர்த்த சைலேந்திரபாபு

தனது இந்த வருகையின் மூலம் போலீஸார் மத்தியில் கோபத்தையும், குழப்பத்தையும் போக்கியிருக்கிறார் சைலேந்திரபாபு எனச் சொல்லப்படுகிறது. பூமிநாதனைக் கொன்ற கொலையாளிகளை குறிப்பாக மணிகண்டனை என்கவுன்டர் செய்யவேண்டும் என்பது திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட போலீஸார் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகப் போலீஸாரின் மனவோட்டமாக இருப்பதை அனைவரும் அறிவர். ஆனால், அதற்கு அரசு அனுமதியளிக்காத நிலையில் போலீஸார் கோபத்திலும் வருத்தத்திலும் இருக்கின்றனர். அதையறிந்து அந்தக் கோபத்தைப் போக்கும்வகையில், டிஜிபி சைலேந்திரபாபுவே நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, தனிப்படை போலீஸாரையும் நேரில் பாராட்டியுள்ளார். இதனால், போலீஸாரின் கோபம் ஓரளவுக்கு குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

அதேநேரத்தில், பூமிநாதன் மேல் எழுந்துள்ள ஒரு குழப்பத்துக்கும் டிஜிபி விடையளித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். ‘அந்த இரவு நேரத்தில் தான் பிடித்துவைத்திருந்த ஒரு சிறுவனின் தாயாருக்குப் போன் செய்த பூமிநாதன், கிட்டத்தட்ட 23 நிமிடங்கள் பேசியிருக்கிறார். அது எதற்காக என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதில் தரும்விதமாகவே, குற்றவாளியின் தாயாருக்கு போன் செய்து அறிவுரை வழங்கினார் பூமிநாதன்’ என்று விளக்கம் அளித்து, பூமிநாதன் மீதான குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் என்று மகிழ்கிறார்கள் திருச்சி காவல் துறையினர்.

Related Stories

No stories found.