
புதுச்சேரி காமராஜ் சாலையில் உப்பனாறு வாய்க்காலில் முதலை குட்டி தென்பட்டதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வனத்துறையினருக்கு தெரிவித்த நிலையில், அந்த முதலையை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.
புதுச்சேரி காமராஜ் சாலையில் நேற்று பகல் உப்பனாறு வாய்க்காலில் முதலை குட்டி ஒன்று காணப்பட்டது. இதனை அங்கு கடை வைத்திருக்கும் ஏழுமலை என்பவர் பார்த்து தனது நண்பரிடம் கூறியுள்ளார். இந்த வாய்க்காலில் சிறுவர்கள் இறங்கி விளையாடுவது வாடிக்கையான ஒன்று என்பதால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர், முதலையை புகைப்படம் எடுத்து வனத்துறையினருக்கு புகார் அளித்தார்.
இதனிடையே அந்த பகுதியில் முதலையை பார்க்க அதிகளவில் பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் வனத்துறையினர் வருவதற்கு முன்பே முதலை தண்ணீரில் மூழ்கியது. இதனையடுத்து வாய்க்காலின் ஆழத்தை அளந்து தண்ணீரின் நீரோட்டத்தை குறைத்தனர். இதையடுத்து, கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.
இதனிடையே வாய்க்கால் கரை ஓரம் வசிக்கும் பொதுமக்கள் முதலையை பார்த்தால் தானாக பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் தண்ணீருக்குள் இறங்க வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இரவு 8 மணிக்கு முதலையை பிடிக்க கோழி இறைச்சியை வைத்து கூண்டு ஒன்றினை தயார்படுத்தினர்.
மக்கள் கூட்டம், வாகன நடமாட்டமும் குறைந்த பிறகு முதலை தென்பட்ட இடத்தில், கூண்டை இறக்கி வைத்தனர். கோழி இறைச்சியை சாப்பிட வரும் போது முதலை சிக்கும் என நம்பி காத்திருந்தனர். நள்ளிரவு 1.30 மணிக்கு முதலை கோழி இறைச்சியை சாப்பிட வெளியே வந்த போது கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது. 16 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு சிக்கிக் கொண்ட முதலையை வனத்துறையினர் எடுத்து சென்றனர்.