`அரசியலாக்க பார்க்கிறார்கள்; ஆதீனத்துடன் பேசி முதல்வர் தீர்வு காண்பார்'- அமைச்சர் சேகர் பாபு

`அரசியலாக்க பார்க்கிறார்கள்; ஆதீனத்துடன் பேசி முதல்வர் தீர்வு காண்பார்'- அமைச்சர் சேகர் பாபு

"பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதல்வர் முடிவெடுப்பார்" என்று சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

தருமபுரம் ஆதீனம் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், பாரம்பரியமாக நடந்து வரும் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்குவதற்கு விதித்த தடையை நீக்க வேண்டும். ஆதீனத்தில் வசிக்கும் 72 பேரும் விருப்பப்படிதான் பல்லக்கு தூக்குவதாக கூறுகின்றனர். தோளில் தூக்கி செல்வதில் மரியாதை குறைவு என்று எதுவும் கிடையாது. மத சுதந்திர உரிமை அடிப்படையில் பல்லக்கில் தருமபுரம் ஆதீனம் பட்டனப்பிரவேசம் செய்ய தடை விதிக்க முடியாது" என்று கூறினார்.

மேலும், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்க தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, "ஆதீனங்களுடன் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் நிகழ்ச்சிக்கு ஆதீனங்கள் அழைக்கப்பட்டு வருகை தந்திருந்தனர். தருமபுரம் ஆதீனம் கடந்த வாரம் முதல்வரை சந்தித்துவிட்டு ஆன்மிக அரசு என பேட்டியளித்திருந்தார். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்க தடை விதித்ததை அரசியலாக்க பார்க்கிறார்கள். வரும் 22-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால் தருமபுரம் ஆதீனத்துடன் முதல்வர் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in