10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சமத்துவபுரம்: திறந்து வைத்தார் முதல்வர்

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சமத்துவபுரம்: திறந்து வைத்தார் முதல்வர்
வீட்டின் சாவியை பயனாளியிடம் ஒப்படைக்கும் முதல்வர்

திமுக ஆட்சியின்போது கருணாநிதி கொண்டுவந்த பல முன்னோடி திட்டங்களில் முக்கியமானது பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம். 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் சமத்துவபுரம் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலக் கோட்டையில் திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு அனைத்து சாதியினரும் அங்கு ஒன்றாக வசிக்க அந்தத் திட்டம் வழி செய்தது. மொத்தம் 240 இடங்களில் சமத்துவபுரங்கள் அப்போது அமைக்கப்பட்டன.

அதன் பின்னர் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் திமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பெரியகொழுவாரி கிராமத்தில் புதிதாக பெரியார் சமத்துவபுரம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் அப்பணிகள் பாதியிலேயே நின்றன. தற்போது மீண்டும் திமுக ஆட்சியில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்று திறக்கப்பட்டது.

பெரியகொழுவாரி கிராமத்தில் அமைந்துள்ள இந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தினை காலை 9 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது, தான் திறந்து வைக்காமல் அங்கிருந்த பெண் ஒருவரை அழைத்து சமத்துவபுரத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கச் செய்தார். வீட்டை பயனாளிகளின் ஒப்படைக்கும் போதும் இதே போன்று முதல்வர் ஸ்டாலின் செய்தது அங்கிருந்தவர்களின் மகிழ்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியது.

இந்த சமத்துவபுரத்தில் சாலை, கழிவறை, மழைநீர் சேகரிப்பு, குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 2.88 கோடி மதிப்பில் 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இங்கு அரசு நியாயவிலைக் கடை, கலைஞர் பூங்கா, விளையாட்டு திடல் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் திடலில் அமைந்துள்ள வாலிபால் மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் வாலிபால் விளையாடினார். பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

Related Stories

No stories found.