`இந்த பாழாய்ப்போன எமன் இன்னும் 15 நிமிடம் பொறுத்திருந்தால் உயிர் போயிருக்காதே'- ஊர் மக்கள் வேதனை

`இந்த பாழாய்ப்போன எமன் இன்னும் 15 நிமிடம் பொறுத்திருந்தால் உயிர் போயிருக்காதே'- ஊர் மக்கள் வேதனை
காவல்துறை அதிகாரிகள், ஆட்சியர் நேரில் விசாரணை
ஊர் மக்கள்
ஊர் மக்கள்

தஞ்சை அருகே சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த விபத்தில், அந்த சப்பரம் மீண்டும் கோயிலை வந்தடைய 15 நிமிடங்களே இருந்த நிலையில் எதிர்பாராமல் இந்த விபத்து நடந்திருக்கிறது.

எரிந்த சப்பரம்
எரிந்த சப்பரம்

தஞ்சை அருகே உள்ள களிமேடு கிராமத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் சித்திரை சதய விழாவின்போது சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். கோயிலை விட்டு கிளம்பிய சப்பரம் அனைத்து வீதிகளிலும் சுற்றி வந்து இறுதியாக கீழத் தெருவில் இருந்து பிரதான சாலைக்கு வந்து திரும்பியது. அப்போது அங்கிருந்த மின்சார வயரில் சப்பரத்தில் முனை பட்டு மின்சாரம் பாய்ந்து இருக்கிறது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நம்மிடம் பேசுகையில், "அப்படியும் நீண்ட கம்புகளைக் கொண்டு மின்சார வயர்களை சப்பரத்தில் படாமல் தான் பார்த்துக் கொண்டோம். வளைவில் திரும்பும் போது எதிர்பாராமல் பட்டுவிட்டது. அந்த இடத்தில் தண்ணீர் அதிகம் தேங்கி இருந்தது. அதனால் 50க்கும் மேற்பட்டவர்கள் சப்பரத்தை விட்டு விலகி சாலையோரம் நின்றிருந்தார்கள். அதனால் அவர்கள் மீது மின்சாரம் பாயாமல் தப்பினார்கள். அந்த தண்ணீர் மட்டும் இல்லை என்றால் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரித்து இருக்கும்" என்றனர்.

களிமேடு கிராமம்
களிமேடு கிராமம்

மேலும் பேசிய அவர்கள், "எங்கெங்கோ எவ்வளவு நேரமோ மின்சாரம் இல்லாமல் இருக்கிறது. அப்படி இந்த இடத்தில் 15 நிமிடத்திற்கு மின்சாரம் இல்லாமல் இருந்திருந்தால் அனைவரும் எந்த ஆபத்தும் இல்லாமல் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடித்திருப்போம். இந்த பாழாய்ப்போன எமன் இன்னும் 15 நிமிடம் பொறுத்திருந்தால் சப்பரம் பாதுகாப்பாக வந்து சேர்ந்திருக்கும். எங்கள் ஊரில் இப்படி ஒரு துயரச் சம்பவம் நடந்து இருக்காது " என்று சொன்னார்கள்.

இந்நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் களிமேடு கிராமத்திற்குச் சென்று விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநாவுக்கரசு சுவாமிகள் கோயில்
திருநாவுக்கரசு சுவாமிகள் கோயில்

இந்நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையிலிருந்து புறப்பட்டு அந்த கிராமத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். இது தொடர்பாக இன்று சட்டபேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததுடன் அவரும் நேரடியாக சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

Related Stories

No stories found.