ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கி சீனர்களுக்கு விசா: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மேலும் ஒரு வழக்கு பதிவு

ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கி சீனர்களுக்கு விசா: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மேலும் ஒரு வழக்கு பதிவு

சீனர்களுக்கு விசா வாங்கி தருவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் எம்பி மீது சிபிஐ மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம், வீடு அலுவலகங்களில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை, டெல்லி, மும்பை, ஒடிசா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக பதவி வகித்தபோது சீனா நாட்டினர் சிலருக்கு விசா பெற்று தருவதற்காக கார்த்தி சிதம்பரம் 50 லட்ச ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக சிபிஐ புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று காலை 6 மணி முதல் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகத்தில் 14 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்பொழுது ப.சிதம்பரம் ராஜஸ்தானிலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் உள்ளனர். ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மட்டும் சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் உள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியை பெற கார்த்தி சிதம்பரம் உதவியதாக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதே போல் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாகவும் சிபிஐ, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நுங்கம்பாக்கத்தில் சிபிஐ சோதனை நடைபெற்று வருவதையொட்டி அவரது இல்லம் உள்ள சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில். ப.சிதம்பரம் வீட்டில் நடைபெறும் சிபிஐ சோதனையை காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை நேரில் சென்று கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, மத்திய அரசை விமர்சிப்பதால் ப.சிதம்பரத்தின் குரல்வளையை நசுக்க சிபிஐ சோதனை நடத்துகிறது. ஏற்கெனவே சிபிஐ, அமலாக்கத் துறை, ஐடி என பல ஏஜென்சிகள் பலமுறை சோதனை நடத்திசென்றனர். தொடர்ந்து சோதனை நடத்துவது எந்த அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது என்பது தெரியவில்லை.

சோதனை செய்யலாம் தவறில்லை, மறுபடியும் மறுபடியும் சோதனை நடத்துவது எந்த வகையில் நியாயம். இது குறித்து சோதனையில் ஈடுபட்டுவரும் அதிகாரிகளிடம் கேட்டதற்கு

புகாரின் அடிப்படையில் சோதனை நடத்துவதாக தெரிவித்தனர் என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in