அடுத்த மாதம் ரூ.1000 கிடைக்குமா? மகளிர் உரிமைத் தொகை இனி மாதந்தோறும் ஆய்வு!

அடுத்த மாதம் ரூ.1000 கிடைக்குமா? மகளிர் உரிமைத் தொகை இனி மாதந்தோறும் ஆய்வு!

மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினால் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000 உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கும் தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000 வீதம் முதல் தவணையாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்திருப்பதாவது: "மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும். 4 சக்கர வாகனம், கனரக வாகனப்பதிவு, பத்திரப்பதிவு குறித்தும் ஆய்வு செய்யப்படும். ஆண்டுதோறும் காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பயனாளிகளின் இறப்பு விவரங்கள் பதிவு செய்யவும், பொதுவிநியோக திட்டம், சேவை வரி தரவுகளை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரையாண்டு அடிப்படையில் பயனாளிகளின் தொழில், மின்சார பயன்பாடுகள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்யவும், மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வருமான வரி விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்துக்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in