மூதாட்டி மாரியாயி
மூதாட்டி மாரியாயி

அரசு மருத்துவமனையில் அவலம்! சிகிச்சைக்காக 3 நாட்களாக காத்திருந்த அதிர்ச்சி!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள இரண்டாம்புலிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியாயி(60). பூ வியாபாரம் செய்து கொண்டு தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டாம்புலிகாடு கடைத்தெருவில் நடந்த சென்று கொண்டிருக்கும் பொழுது இருசக்கர வாகனம் மோதி காலிலும், கைவிரல்களிலும் முறிவு ஏற்பட்டது. அந்த பகுதியில் இருந்தவர்கள், மாரியாயியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக சிகிச்சைக்காக அனுமதித்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி அளித்து, கால் மற்றும் கைகளில் தற்காலிகமாக கட்டும் போட்டனர்.

மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் பெட் இல்லாததால் மர பெஞ்சில் படுக்க வைக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு கடந்த மூன்று நாட்களாக எலும்பு முறிவு டாக்டர் வரவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மாரியாயி கடும் வலியுடன் அந்த பெஞ்சிலேயே தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, அவரது உறவினர்கள் மருத்துவமனையில் கேட்ட பொழுது டாக்டர் வெளியூர் சென்று இருப்பதாகவும், நாளை வந்து விடுவார் என்று கூறியே மூன்று நாட்களை கடத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் செய்வதறியாது மூதாட்டியும் அவரது உறவினர்களும் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மிகுந்த மோசமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in