தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மேலும் சில தகவல்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மேலும் சில தகவல்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி

‘தமிழ்த்தாய் வாழ்த்து இனி தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ மாநிலப் பாடல்’ - இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்வுகளிலும், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும். அப்போது மாற்றுத் திறனாளிகள் தவிர அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் இந்த அரசாணைக்குத் தமிழ் ஆர்வலர்கள், படைப்பாளிகள், மொழியுரிமைப் போராளிகள், தமிழ் உணர்வாளர்கள் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பலரும் பெருமளவு வரவேற்பு தெரிவித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து அரை நூற்றாண்டுக்கு முன்பு கருணாநிதி தலைமையிலான திமுக அரசு பிறப்பித்த ஆணையை புதிய அரசாணை மூலம் வலுப்படுத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின் என்ற வரவேற்புக் குரல் எழுந்தது.

அதேசமயம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரையும் எழுந்து நிற்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தலாமா, இந்தியாவுக்கென தேசிய கீதம் இருக்கும்போது தமிழ்நாட்டுக்கென மாநிலப் பாடலை அறிவிக்கலாமா என்பன போன்ற கேள்விகளும் எழத் தவறவில்லை. முக்கியமாக, தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாகப் பாட வேண்டும் என்றும் இடைப்பட்ட காலத்தில் நீக்கப்பட்ட வரிகள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் ஆங்காங்கே குரல்கள் கேட்கின்றன. அந்தக் குரலுக்கான பின்னணி என்ன?

ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த அரசு விழாக்களிலும் பொதுவிழாக்களிலும் இறைவணக்கப் பாடல் பாடுவது வழக்கத்தில் இருந்தது. 'கஜவதனா கருணாகரனா' என்ற பாடலோ, 'வாதாபி கணபதே' என்ற விநாயகர் பாடலோ பாடப்படும். ஆனால், 1967-ல் தமிழ்நாட்டில் அண்ணா தலைமையில் திமுக அரசு அமைந்தபிறகு, அரசு நிகழ்ச்சிகளில் மொழிவாழ்த்துப் பாடல் ஒன்றைப் பாடுவது குறித்த விவாதங்கள் எழுந்தன.

மறைந்த முதல்வர் அண்ணா
மறைந்த முதல்வர் அண்ணா

இந்தியாவுக்கு நாட்டுப்பண் என்கிற தேசிய கீதம் இருப்பதுபோல, தமிழ்நாட்டுக்கென மொழி வாழ்த்துப் வேண்டும் என்ற கருத்து எழத் தொடங்கியது. அப்படியான தனிப்பாடலை அறிவிப்பதென்றால் அதற்குப் பொருத்தமானதொரு பாடல் எதுவாக இருக்கும் என்ற வாதமும் கூடவே எழுந்தது. அப்போது முதலமைச்சர் அண்ணாவைச் சந்தித்த கரந்தை தமிழ்ச்சங்க நிர்வாகிகள், மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய ‘நீராருங் கடலுடுத்த’ என்று தொடங்கும் பாடலைத் தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், அது தொடர்பான முடிவை எடுப்பதற்குள் அண்ணா மரணம் அடைந்துவிட்டார்.

அதன்பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, தமிழ்நாட்டுக்கான மாநிலப் பாடலைத் தேர்வுசெய்யும் முயற்சியில் இறங்கியதோடு, அதற்காக ஆய்வாளர்கள் குழு ஒன்றையும் அறிவித்தார். அப்போது 3 பாடல்கள் ஆய்வுக்குழுவினரால் பரிசீலிக்கப்பட்டன.

முதல் பாடல், மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வணக்கப்பாடல். அது தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகச் சொல்லி சமஸ்கிருதப் பற்றாளர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. 2-வது பாடல், திருக்குறளின் முதல் அதிகாரம். ஆனால் அந்தப் பாடலில் தாள், அடி என்பன போன்ற வார்த்தைகள் இருப்பதால் அதில் உருவ வணக்கத்தின் சாயல் தென்படுவதாகச் சொல்லி எதிர்ப்பு எழுந்தது. 3-வது பாடல், தாயுமானவர் எழுதிய அங்கிங்கெனாதபடி பாடல். அது இந்து மதத்தைப் பெரிதும் சார்ந்திருப்பதாக விமர்சனம் எழுந்தது.

நீண்ட நெடிய விவாதங்களுக்குப் பிறகு ஆய்வுக் குழுவினர் கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படையில், 1891-ல் தமிழறிஞர் பேராசிரியர் பெ.சுந்தரனார் எழுதிய ‘மனோன்மணியம்’ என்ற நாடகக் காவியத்தில் இடம்பெற்ற தமிழ்த்தாய் தெய்வ வணக்கப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக வைத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது.

அதன்பிறகு, 1970 மார்ச் 8 அன்று சென்னையில் நடந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதன்முதலாகப் பாடப்பட்டது. அந்த மேடையில்தான் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். அதன்பிறகு, 1970 ஜூன் 17 அன்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கான தமிழ்நாடு அரசின் அரசாணை வெளியிடப்பட்டது.

மனோன்மணியம் பெ.சுந்தரனார்
மனோன்மணியம் பெ.சுந்தரனார்

அதன்படி, மனோன்மணியம் பெ.சுந்தரனார் பாடிய தமிழ் வணக்கப் பாடலின் முதல் பத்தியுடன் இரண்டாம் பத்தியின் கடைசி வரியை மட்டும் இணைத்து, தமிழ்நாடு அரசுக்கான தமிழ்த்தாய் வாழ்த்து அங்கீகரிக்கப்பட்டது. அந்தப் பாடலுக்கு இசையமைக்கும் பொறுப்பு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் – பஞ்சுவிடம் கொடுத்திருந்தார் கருணாநிதி.

அப்போது, அந்தப் பாடலுக்காக 21 விதமான மெட்டுகளைப் போட்டிருந்தார் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. அவை அனைத்தையும் முழுமையாகக் கேட்டபிறகு, ஒரு மெட்டைத் தேர்வுசெய்துகொடுத்தார் முதலமைச்சர் கருணாநிதி. அது எம்.எஸ்.வி போட்ட முதல் மெட்டு. மோகன ராகத்தில் அமைக்கப்பட்ட அந்தப் பாடலைப் பாடுவதற்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.வியின் தேர்வு டி.எம்.செளந்தர்ராஜனும் பி.சுசீலாவும்தான். தமிழ்த்தாய் வாழ்த்துக்கான ஒலிப்பதிவு பணிகள் நடந்தபோது, ஜெமினி இசைக் கூடத்துக்கு நேரில் வந்து, ஒலிப்பதிவு முழுமைபெறும் வரை அங்கேயே இருந்து, பாடலை முழுமையாகக் கேட்ட பிறகுதான் புறப்பட்டார் கருணாநிதி.

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

தமிழணங்கே!


உன் சீரிளமைத் திறம்வியந்து

செயல்மறந்து வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!


இதுதான் தமிழ்நாடு அரசு அங்கீகரித்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல். ‘பூமி என்ற பெண் நீராலான கடலை ஆடையாக அணிந்துள்ளாள். அவளின் சிறப்புமிக்க அழகிய முகமாக பாரத கண்டம் திகழ்கிறது, அந்த முகத்துக்குப் பிறைநிலவு போன்ற நெற்றியாக தக்காணம் அமைந்துள்ளது. அந்த நெற்றியில் நறுமணமிக்க பொட்டு வைத்தது போல் திராவிட நல் திருநாடாகிய தமிழ்நாடு உள்ளது. பொட்டின் மணம் எல்லோரையும் இன்புறச்செய்வது போல் தமிழ்த்தாயும் எல்லாத் திசைகளிலும் புகழ்பெற்றவளாக இருக்கிறாள். உலகின் மூத்த மொழியாக இருந்தும் இன்றளவும் இளமையாக இருக்கிறாள். தமிழ்மொழியின் வளம் பெருகுகிறதே தவிர குறையவில்லை. அப்படிப்பட்ட தமிழே, தமிழாகிய பெண்ணே, தாயே உன்னை வாழ்த்துகிறேன். நீ வாழ்க!’ என்பதுதான் தமிழ்த்தாய் வாழ்த்தின் விளக்கம்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசின் பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவேண்டுமென்ற தமிழ்நாடு அரசின் அரசாணை 1970 நவம்பர் 23 அன்று அமலுக்கு வந்தது. மோகன ராகத்தில் திஸ்ர தாளத்தில் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவேண்டும் என்பது அரசாணை. அந்த நாளில் இருந்து ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ என்று தொடங்கும் பாடல் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடப்பட்டு வருகிறது.

உண்மையில், அந்தப் பாடல் குறித்த அரசாணை வெளியானபோதே சில சர்ச்சைகளும் ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக, மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக வைக்காமல், சில முக்கியமான பகுதிகளை நீக்கிவிட்டு, எஞ்சிய பகுதியை மட்டுமே பாடுவதற்கு உத்தரவிட்டார் கருணாநிதி என்பதுதான் முதல் சர்ச்சை.

அதற்கு முதலமைச்சர் கருணாநிதி அப்போதே விளக்கம் கொடுத்திருந்தார். “வாழ்த்துப் பாடலுக்கு ஏற்றவகையில் அந்தப் பாட்டை ஓரளவு குறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய அந்தப் பாடலில் சமஸ்கிருத மொழி உலக வழக்கொழிந்த மொழி என்பதை ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து என்று சொல்லித் தமிழ் மொழியைப் புகழ்ந்திருந்தார்.

அரசு நிகழ்ச்சியில், அதுவும் தமிழ்த்தாய் வாழ்த்தில் மற்றொரு மொழியைக் குறைத்தும் பழித்தும் கூறுதல் வேண்டாம் என்பதற்காகவும், அழிந்து – ஒழிந்து என்ற சொற்களை ஒரு பகுதியினர் அமங்கலச் சொற்கள் எனக் கருதி முகஞ்சுளிப்பர் என்பதற்காகவும் அந்த வரிகளை அகற்றிவிட்டு இசையமைக்குமாறு கேட்டுக்கொண்டேன்” என்பதுதான் முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த விளக்கம்.

கி.வா.ஜகந்நாதன்
கி.வா.ஜகந்நாதன்

ஆனால் அந்தக் காரணத்துக்காகக் குறிப்பிட்ட வரிகள் நீக்கப்படவில்லை என்றும், அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் படைத்து, காத்து, முடிவில் அவற்றைத் தன்னுள் அடக்கும் ஓர் எல்லையற்ற பரம்பொருளாம் இறைவன் எந்த மாற்றத்துக்கும் உட்படாமல் எப்போதும் இருந்தபடி நிலைப்பேறாக இருப்பதைப் போல என் தமிழ்த்தாய் என்றும் மாறாத சீரிய இளமையோடு நிலைத்திருப்பாள் என்ற பொருள் கொண்ட வரிகள்தான் நீக்கப்பட்டன என்றும் சர்ச்சை தொடர்ந்தது. குறிப்பாக, பரம்பொருள் என்ற வார்த்தை கடவுளைக் குறிப்பதால், நாத்திகரான கருணாநிதி பரம்பொருள் என்ற வார்த்தையை நீக்குவதற்காக அந்த வரிகளையே நீக்கிவிட்டார் என்ற விமர்சனம் தொடர்ந்தது. அதுகுறித்து கி.வா.ஜகந்நாதன் எழுப்பிய சர்ச்சையும், கா.அப்பாதுரையார் தொடங்கி சிலம்புச்செல்வர் ம.பொ.சி, டாக்டர் மு.வரதராசனார் ஆகியோர் அரசுக்கு அளித்த ஆதரவும் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன.

கா.அப்பாதுரையார்
கா.அப்பாதுரையார்

மூன்றாவது சர்ச்சை நாடாளுமன்றத்திலேயே வெடித்தது. இந்தியாவுக்கென்று தேசிய கீதம் இருக்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது சரியல்ல என்றும் அப்படிப் பாடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானதும் என்றும் மேற்கு வங்க மாநிலம் காண்டாய் தொகுதியைச் சேர்ந்த பிரஜா சோஷலிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமர் குஹா எதிர்ப்பு கிளப்பினார். ஆனால், தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்று சொல்லிவிட்டது மத்திய அரசு. அத்தோடு தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த மூன்றாவது சர்ச்சையும் முடிவுக்கு வந்தது.

உண்மையில், தமிழ்த்தாய் வாழ்த்தைப் போல இந்தியாவின் பல மாநிலங்கள் தங்களுக்கான மொழி வாழ்த்துப் பாடல்களையும் மாநிலப் பாடல்களையும் வைத்துள்ளன. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தியா சுதந்தரம் அடைவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே 1927-ல் அசாமியர்கள் தங்களுக்கென தனி தேசிய கீதத்தை உருவாக்கி, அங்கீகரித்துவிட்டனர். அதன்பிறகு 9 ஆண்டுகள் கழித்து 1936-ல், ஒடிசா மாநிலம் தனக்கான பிரத்யேக மாநிலப் பாடலை அறிவித்து அங்கீகரித்துவிட்டது.

1956-ல் மொழிவாரி மாகாணப் பிரிவினை மூலம் தனிமாநிலமாக உருவெடுத்தபோது, ‘மா தெலுகு தள்ளிகி’ என்ற பாடலைத் தமக்கான மாநிலப் பாடலாக அறிவித்துவிட்டது ஆந்திரம். அந்த வரிசையில்தான் தமிழ்நாட்டுக்கென தமிழ்த்தாய் வாழ்த்து அறிவிக்கப்பட்டது. அதனால் தமிழ்த்தாய் வாழ்த்தால் மாநில இறையாண்மைக்கு ஆபத்து என்ற வாதம் ஆரம்பத்திலேயே அடிபட்டுப் போய்விட்டது. பின்னாட்களில் கர்நாடகம், பிஹார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களும் தங்களுக்கென தனி மாநிலப் பாடல்களை உருவாக்கி, அங்கீகரித்துவிட்டனர்.

அதனால் தமிழ்நாட்டில் ஆட்சிகள் மாறியபோதும், முதலமைச்சர்கள் மாறியபோதும் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து எந்தவொரு சர்ச்சையும் பெரிய அளவில் எழவில்லை. அப்படியான சூழலில்தான் 2018-ல் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட காஞ்சி சங்கராச்சாரியார்களுள் ஒருவரான விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். மற்ற விருந்தினர்கள் எல்லோரும் எழுந்து நின்றிருந்தனர். அந்தச் செயல் சர்ச்சையாக வெடித்தது.

தேசிய கீதம் பாடும்போது எழுந்து நின்ற விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் தவிர்த்தது, தமிழ் மொழியை அவமதிக்கும் செயல் என்ற விமர்சனங்கள் எழுந்தன. அப்போது விஜயேந்திரர் தியானம் செய்துகொண்டிருந்ததால் எழுந்து நிற்கவில்லை என்று விளக்கம் தரப்பட்டது. அத்தோடு, காஞ்சி சங்கர மடத்தில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களுக்குக்கூட பக்தர்கள் எழுந்து நிற்பார்களே தவிர, மடாதிபதிகள் எழுந்து நிற்க மாட்டார்கள் என்றும் விளக்கம் சொல்லப்பட்டது.

ஆனாலும், ‘தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மன்னிப்பு கோர வேண்டும்’ எனும் கோரிக்கை வலுத்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரிடமிருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் கலவையாக வந்தன. அதன் நீட்சியாக ராமேஸ்வரம் சங்கர மடத்துக்குள் சென்ற சிலர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டார் என்று சொல்லி விஜயேந்திரருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். உடனடியாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றது.

சமீபத்தில் விசாரணைக்கு வந்த அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “மனுதாரருக்கும் புகார்தாரருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதால் வழக்கைத் தொடர்ந்து நடத்துவதில்லை. ஆகவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது” என்று தீர்ப்பளித்தார். அத்தோடு, தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து வேறு சில கருத்துகளையும் முன்வைத்திருந்தார்.

குறிப்பாக, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவும் இல்லை. மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்கப் பாடல். தேசிய கீதம் அல்ல என்பதால் எழுந்து நின்றுதான் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது” என்பது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்வைத்த கருத்து.

“அத்தோடு, பல்வேறு கலாச்சாரங்களை மதித்துக் கொண்டாடுகிற நாம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இப்படித்தான் மரியாதை செலுத்த வேண்டும் என்பது சரியல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து இறைவணக்கப் பாடல் என்பதால், அது இசைக்கப்படும்போது ஆன்மிகவாதிகள் தியான நிலையில் இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது விஜயேந்திரர் தியான நிலையில் கண்களை மூடிய நிலையில் இருந்துள்ளார். தமிழுக்கு அவர் அவரது வழியில் உரிய மரியாதை செலுத்தியுள்ளார்” என்ற கருத்தையும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முவைத்தார்.

இந்தத் தீர்ப்பைத் தாண்டி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்று சட்டம் ஏதுமில்லை என்ற நீதிபதி சொன்னது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது. இந்தியாவின் நாட்டுப்பண் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று சட்டம் இந்தியாவில் அமலில் இருக்கும்போது, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்போது ஏன் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்ற சட்டம் இல்லை என்ற கேள்வி எழுந்தது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசிடமிருந்து 2021 டிசம்பர் 17 அன்று ஓர் அரசாணை வெளியானது. அது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் முறை குறித்த சில வழிகாட்டும் நெறிமுறைகளைக் கூறியிருந்தது. அதன்படி, மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய, ‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்தின் வரிகள் 55 விநாடிகளில் முல்லைப்பாணி என்கிற மோகன ராகத்தில் மூன்றன் நடை என்கிற திசுரத் தாளத்தில் பாடப்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று சொல்கிறது அந்த அரசாணை.

அதேசமயம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் தவிர அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்றும் சொன்னது அரசின் உத்தரவு. முக்கியமாக, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசை வட்டுகளைப் பயன்படுத்தாமல், பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.

அதேசமயம், தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாகப் பாடவேண்டும் என்றும் அந்தப் பாடலின் இதயப்பகுதியை வெட்டி எறிந்த வரலாறு சரிசெய்யப்பட வேண்டும் என்று பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமை என்ற வரிகள் மீண்டும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படுமா, அல்லது விளக்கம் தரப்படுமா?

ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர், ஊடகவியலாளர், ‘திராவிட இயக்க வரலாறு’, ‘தமிழக அரசியல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in