குட் நியூஸ்... ஜப்பான் நிதி ஓகே... மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டெண்டர் கோரியது மத்திய அரசு!

மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ்
Updated on
3 min read

ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் இருந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதி கிடைக்கப்பட்டுள்ளதால் 222. 47 ஏக்கரில் மதுரை எய்ம்ஸ் கட்டிடப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள கட்டுமான நிறுவனங்கள் செப்.18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என எய்ம்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.

அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி.
அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015 பிப்ரவரி 28-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் முதன்மையானதாக கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை நம் மாநிலத்துக்கு வருவதை அறிந்த தமிழக மக்கள் உயர் தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்வது முதல் நிதி ஒதுக்குவது வரை, கடந்த 8 ஆண்டுகளாக ஆடு, புலி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2018 ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அப்போதைய அதிமுக அரசு இந்த மருத்துவமனையை தஞ்சாவூர் அருகே கொண்டு செல்வதற்கு முடிவு செய்திருந்ததால் மதுரையில் அமைவதாக கூறப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

அதனால், நிலம் ஒதுக்கீட்டில் சிறிது காலம் இந்த மருத்துவமனை திட்டப்பணிகள் தாமதமானது. அதன்பின்னர் இடம் ஒப்படைக்கப்பட்டு, நிதி ஒதுக்குவது தாமதமானது. இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கியது.

ஆனால், தமிழகத்தில் அமையும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கேட்டது. அந்த நிறுவனம், கடன் வழங்க ஒப்பு கொண்டாலும், அதற்கான நடைமுறைகள், ஆய்வுப் பணிகளுக்கு அந்த நிறுவனம் தாமதம் செய்தது.

இந்நிலையில் சட்டசபை தேர்தல் வந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் உடனடியாக தொடங்கும் என மதுரைக்கு பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவித்திருந்தனர்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி தொடங்கவில்லை. ஆனால், மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணியைத் தொடங்காமலே, இந்த மருத்துவமனை கல்லூரிக்கான 50 எம்பிபிஎஸ் இடத்திற்கான மாணவர் சேர்க்கையை நடத்தி, மதுரையில் வகுப்பறை வசதியில்லாததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில், தற்காலிகமாக வகுப்புகளை தொடங்கியது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி

தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக படித்து வருகின்றனர்.

இதற்கிடையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இன்னும் முட்டல், மோதல் அதிகமானது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், வெளிப்படையாகவே மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்குவதற்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் எந்த முயற்சியும் செய்யவில்லை, மத்திய அரசாலே இந்த பணிகள் தாமதமாவதாக குற்றம் சாட்டினார்.

அதற்கு மத்திய அரசு பதிலுக்கு திமுக அரசை குற்றம்சாட்டவே, மத்திய, மாநில அரசுகளின் இந்த முரண்பட்ட பதில்களால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வருமா, வராதா என தென் மாவட்ட மக்கள் குழப்பமடைந்தனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்தவமனையுடன் அறிவித்த நாட்டின் பிற மருத்துவமனை கட்டுமானப்பணிகள் முடிந்தும், தொடங்கியும் நடக்கும் நிலையில் 2022-ல் திறக்கப்பட வேண்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே, பணிகள் எதுவுமே தொடங்காமல், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதோடு நிற்கிறது.

பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டு விழாவில் 45 மாதங்களில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என கூறிய நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஒதுக்கிய 224.24 ஏக்கர் இடம் வெறும் பொட்டல் காடாகவே இன்று வரையில் காட்சி அளிக்கிறது. அதனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக அரசியல் தொடங்கி நாடாளுமன்றம் வரை பேசுபொருளாகி விவாதிக்கப்பட்டது. தற்போது அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலையில் சுற்றுச்சுவர் மற்றும் நிர்வாக பணிகளுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதி கிடைக்கப்பட்டுள்ளதால் 222. 47 ஏக்கரில் மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இரு கட்டங்களாக பணிகள் நடைபெறும் எனவும், 33 மாதத்தில் பணிகளை முடிப்பதற்கான ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 870 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை சிகிச்சை வளாகம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கான 30 படுக்கைகளுடன் கூடிய அறை, 150 எம்பிபிஎஸ் மாணாக்கர்கள், செவிலியர்கள் பயிலும் வகையிலான வகுப்பறைகள், அவர்களுக்கான தங்கும் விடுதிகள், ஆடிட்டோரியம், உணவகம், மாணாக்கர்களுக்கான தங்கும் விடுதிகள், இயக்குனருக்கான தங்கும் இல்லம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், உணவகம், பணியாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள கட்டுமான நிறுவனங்கள் செப்.18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என எய்ம்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.

கட்டிடப் பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட்டிடப் பணிகள் எப்போதும் தொடங்கும் என்பதற்கான கேள்விக்கான வினா எப்போது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனியாவது, தென் மாவட்ட மக்களின் உயிர் காக்கும் உயர் சிகிச்சை தர காத்திருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் நீட்டைபோல் மத்திய, மாநில அரசுகள் அரசியல் செய்யாமல் விரைவாக கட்டுமானப் பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in