`மதுவில் கலப்படமா?; கள்ள மது விற்பனையா?'- உயிரிழந்த திமுக பிரமுகருக்காக குரல் கொடுக்கும் ராமதாஸ்

`மதுவில் கலப்படமா?; கள்ள மது விற்பனையா?'- உயிரிழந்த திமுக பிரமுகருக்காக குரல் கொடுக்கும் ராமதாஸ்

கோவையில் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிக் குடித்த திமுக பிரமுகர் உயிரிழந்த நிலையில், "மதுவை குடித்தவர் உயிரிழக்க காரணம் என்ன? மதுவில் கலப்படமா? கள்ள மது விற்பனை செய்யப்பட்டதா?" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடிப்பகத்தில், மதுக்கடை திறக்கும் நேரத்திற்கு முன்பே மது அருந்திய திமுக நிர்வாகி சண்முகம் உயிரிழந்திருக்கிறார். சிவா என்பவர் கண்பார்வை பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகிறார். இது மிகவும் வேதனையளிக்கிறது.

அரசு மதுக்கடை குடிப்பகத்தில் வழங்கப்பட்ட மதுவை குடித்தவர் உயிரிழக்க காரணம் என்ன? மதுவில் கலப்படமா? கள்ள மது விற்பனை செய்யப்பட்டதா? டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மது வகைகள் தரம் குறைந்தவையா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஆணையிட வேண்டும்.

அரசு மதுக்கடைகளில் மது விற்பனை நண்பகல் 12 மணிக்குத் தான் தொடங்கப்பட வேண்டும் என்ற நிலையில், குடிப்பகத்தில் காலை 11.30 மணிக்கே மது வழங்கப்பட்டது எப்படி? டாஸ்மாக், காவல்துறை இதை வேடிக்கை பார்க்கின்றனவா? இது தொடர்பாக யார் ?மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? மது மனிதர்களைக் கொல்லும் நஞ்சு. அது சட்டப்பூர்வமாகவோ, சட்டவிரோதமாகவோ விற்கப்படக் கூடாது. எனவே, தமிழ்நாட்டில் படிப்படியாகவோ, ஒரே கட்டமாகவோ மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in