டீசல் நிரப்ப கர்நாடகா செல்லும் தமிழக லாரிகள்

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக புகார்
டீசல் நிரப்ப கர்நாடகா செல்லும் தமிழக லாரிகள்

தமிழகத்தைக் காட்டிலும் கர்நாடக மாநிலத்தில் டீசல் விலை 9.50 ரூபாய் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தமிழக லாரிகள் அம்மாநிலத்திற்கு சென்று டீசல் நிரம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச விலை நிலவரத்துக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தாங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த கால கட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போதுள்ள பாஜக அரசும் இதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் காலத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட சமயத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியபோதும் விலை உயர்வு பற்றி மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மீது தனது பாரா முகம் காட்டி வருகிறது.

இச்சூழலில் கடந்த ஒரு மாத காலமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதை காரணம்காட்டி எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த தொடங்கியுள்ளது. இதன்படி கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. மார்ச் 31-ம் தேதி வரை 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.05-ம், டீசல் விலை ரூ.6.05-ம் உயர்த்தப்பட்டது. ஏப்.1-ம் தேதி மட்டும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தவில்லை. மறுநாளான ஏப்., 2-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.73 எனவும், பிரிமியம் பெட்ரோல் ரூ.115.04 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ.100.82 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் ஏற்றம் காணும் டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் நிலையான வாடகை நிர்ணயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் டீசல் விலை குறைவு என்பதால் டீசல் பிடிக்க தமிழக லாரிகள் கர்நாடகவுக்கு செல்லத் தொடங்கியுள்ளன. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை ஈடுகட்ட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 நல்லதம்பி
நல்லதம்பி

இதுகுறித்து மாநில உரிமையாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் நல்லதம்பி கூறுகையில், "மத்திய அரசின் முடிவால் எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக டீசல் விலையை சூழல் உருவாகியுள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும் இந்தியாவில் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே இருந்தது. கடந்த 6 மாத காலமாக 5 மாநில தேர்தலை முன்னிட்டு டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியான பின் கடந்த 15 நாட்களில் டீசல் விலை ரூ.9.53 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில் அண்டை மாநிலமான புதுச்சேரி, கர்நாடக மாநிலத்தில் டீசல் விலை தமிழகத்தை விட ரூ. 9.50 காசுகள் வித்தியாசம் உள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்திற்கு லோடு கொண்டு செல்லும் லாரிகள் அங்கேயே டீசல் நிரப்பிக் கொள்ளுகின்றன. அதனால் தமிழக அரசுக்கு போதிய வருவாய் இல்லாத சூழல் உருவாகியுள்ளது" என்றார்.

Related Stories

No stories found.