`தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நேரடியாக தலையிடுங்கள்'

பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
`தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நேரடியாக தலையிடுங்கள்'

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் நீங்கள் நேரடியாகத் தலையிட்டு, மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில், இப்பிரச்சினையை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்" என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் பிரதமரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் தங்களது இயந்திர மீன்பிடிக் கப்பலில் அதிகாலையில் பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள மயிலாட்டி தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் மற்றொரு மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, 26-2-2022 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் 27-2-2022 அதிகாலையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையிலுள்ள கிராஞ்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் குறுகிய கால கட்டங்களில் தொடர்ந்து இதுபோன்று எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. மீனவர்கள் துன்புறுத்தப்படும் நிகழ்வுகளும், கைது செய்யப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன என்பதைக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளபோதிலும் இந்த நிலை தொடர்கிறது.

பாக் வளைகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிக்கும் வகையிலான இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள், ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் சிறைபிடிக்கப்படுவதும், மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நேரடியாகத் தலையிட்டு, மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில், இப்பிரச்சினையை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in