இணையத்தில் தமிழை சரியாகப் பயன்படுத்துங்கள் - தமிழிசை வேண்டுகோள்

இணையத்தில் தமிழை சரியாகப் பயன்படுத்துங்கள்  -  தமிழிசை வேண்டுகோள்
ஆய்வரங்கத்தை துவக்கி வைக்கும் தமிழிசை சவுந்தரராஜன்

“சமூக வலைதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகவும் பயமாக உள்ளது. இணையத்தில் தமிழ் மொழியைச் சரியாகப் பயன்படுத்துங்கள்" என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பாரதியார் நினைவு நூற்றாண்டுப் பன்னாட்டு ஆய்வரங்கம் பல்கலைக் கழக துணை வேந்தர் வி.திருவள்ளுவன் தலைமையில் இன்று நடைபெற்றது. தெுலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு ஆய்வரங்கத்தை தொடங்கி வைத்தார்.

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “ நான் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவி என்பதால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள். குழந்தைகளின் நாவில் தமிழ் வளர வளர தமிழும் வளரும்.

மரக்கன்றுகள் நடுவது எனக்கு மிகுந்த ஆர்வத்தை தரும் செயல், அந்த வகையில் இந்த பல்கலைக் கழகத்தில் பலா மரக்கன்றை நட கொடுத்தார்கள். அந்த மரக்கன்றுகளை நடுவதற்கு பாரதியின் புகழ் வீசும் எட்டயபுரம், திருவல்லிக்கேணி, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து மண் கொண்டு வந்திருந்தார்கள். இந்த மண்ணின் புகழோடு, மரத்தின் வாசனையும் சேர்ந்து வீசட்டும்.

உடல் நலன் குறித்து பாரதியார் தனது உரைநடையில் பல தகவல்களை தெரிவித்துள்ளார். உடல் நலமும் மன நலமும் பெற்றால் எல்லா நலமும் பெறலாம் என அவர் கூறியுள்ளார். பெண்கள் உயர்வுக்காகவும் பாரதியார் மிகவும் பாடுபட்டுள்ளார். அவருக்கு பெண்கள் அனைவரும் நன்றி கடன் செலுத்த கடமைப் பட்டுள்ளோம்.

நாம் சங்ககாலம் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால், கரோனா காலம் என்பதை இந்த நூற்றாண்டை சேர்ந்தவர்கள் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. உலக அளவில் மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால், நமது உணவு முறை அதை பொய்யாக்கிவிட்டது. நமது கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் கலாச்சாரத்தை, தற்போதைய கரோனா பரவலுக்கு பிறகு உலக நாட்டினரும் பின்பற்ற தொடங்கிவிட்டனர்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “இன்றைக்கு சமூக வலைதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளைக் கண்டால் மிகவும் பயமாக உள்ளது. இணைய வழியில் தமிழை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். எனவே, இணையத்தில் தமிழ் மொழியை சரியாகப் பயன்படுத்துங்கள். இணையத்தின் மூலம் திட்டுவதற்கு கூட. அழகிய தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்.

விமர்சனம் என்பது தமிழரின் பாங்கு. ஆனால், அதை மரியாதையான சொற்களுடன் பயன்படுத்த வேண்டும். தற்போது என்னை பற்றி அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர், சமூக வலைதளத்தில், ‘இரு மாநிலங்களுக்கு அவள் ஆளுநரா?’ என்று ஒருமையில் கருத்து தெரிவித்திருந்தார். இரண்டு மாநிலத்தில் ஒரு பெண் ஆளுநராக இருப்பது எவ்வளவு சிரமம், ஒரு தமிழச்சி இருமாநிலங்களையும் ஆண்டு கொண்டிருப்பதை எண்ணி ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். எனவே, திட்டுவதற்குக்கூட தமிழில் தமிழ் மொழியை மரியாதையுடன் பயன்படுத்துங்கள். இல்லையென்றால் நீங்கள் தமிழர்களே இல்லை" என்று சொன்னார்.

Related Stories

No stories found.