தமிழ் வழிக் கல்வியில் 20 % இடஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

தமிழ் வழிக் கல்வியில் 20 % இடஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என சிறைத்துறை அதிகாரி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சென்னை புழல் சிறையில் உதவி சிறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ஷாலினி. இவர் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்தம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதில் “நீலகிரி மாவட்டம் கேரள எல்லையில் உள்ள சேரம்பாடியில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்தேன். 11 மற்றும் 12-ம் வகுப்புகள் எங்கள் ஊரில் இல்லாததால் அருகிலுள்ள கேரள பள்ளி ஒன்றில் ஆங்கில வழிக்கல்வியில் படித்தேன். குரூப்-2 தேர்வு எழுதி, தமிழ் வழியில் படித்ததற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில், சென்னை புழல் சிறையில் உதவி சிறைத் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறேன்.

மேலும் சிறந்த பணி வாய்ப்பை பெறுவதற்காகக் கடந்த 2021-ம் ஆண்டு குரூப் -1 தேர்வு எழுதினேன். அப்போது தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க, தமிழக அரசின் புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழைக் கேட்டனர். தமிழக அரசின் சட்டத்திருத்தம் தனது அடிப்படை உரிமையைப் பாதிக்கிறது. எனவே, புதிய சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் டி.ராஜா மற்றும் கே.குமரேஷ்பாபு அமர்வு விசாரணை செய்தது. அப்போது “பணிக்குத் தகுதி உடைய படிப்பு படிக்கும் வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில்தான் படித்திருக்க வேண்டும். அப்போதுதான் 20 சதவிகித இட ஒதுக்கீட்டின் படி பணி வழங்க முடியும். மேலும் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ” என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 20 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக ஷாலினி தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in