`நீட்' விலக்கு மசோதா நிறைவேற்றம்!- ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்டது

சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்
சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்

நீட் விலக்கு கோரும் சட்ட மசோதா ஒருமனதாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா ஆளுநருக்கு உடனடியாக அனுப்பப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில், நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "நீட் தேர்வு முறை கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உயர்மட்ட குழு தனது அறிக்கையில் தெளிவாக விளக்கியுள்ளது. உண்மை நிலையும் அதுவே. உயர்மட்ட குழுவின் அறிக்கை ஒரு தலைபட்சமானது என்றும், இந்த அறிக்கை ஒரு தலைபட்சமான முடிவை அளித்துள்ளது என்ற ஆளுநரின் கருத்து முற்றிலும் தவறான கருத்து ஆகும். அதற்கு பதில், புள்ளி விபரங்களை ஆய்வு செய்தது மட்டுமின்றி பொதுமக்களிடம் விரிவாக கருத்து கேட்டு, அதை வல்லுநர்களுடன் ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளது.

சட்டமன்றத்தில் இருந்த அனைத்த கட்சிகளும் நீட் தேர்வு முறைக்கு எதிராக ஒப்புதல் அளித்துள்ளது. சிஎம்சி வேலூர் விசர்ஸ் ஒன்றிய அரசு வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்பு நீட்டை உறுதிப்படுத்தும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆளுநர் கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை அரசியல் சட்ட அமைப்பின் படி குடியரசு தலைவருக்கு அனுப்புவதை தவிர்த்து விட்டு ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டி காட்டியுள்ளது சரியான அணுகுமுறை அல்ல என கருதுகிறேன். அரசியல் சட்ட அமைப்பில் மாநில அரசுக்கும் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் உள்ளது.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரை
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரை

எந்த ஒரு சட்டமும் ஏதாவது ஒரு ஒன்றிய அரசின் சட்டத்துக்கு மாறாக இருந்தால், அதற்கு அரசியல் சட்ட அமைப்பு 254/2ன் கீழ் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு. சட்டமன்றத்தால் சட்டமே இயற்ற கூடாது என்று ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டுவது அரசியல் சட்ட அமைப்பின் அடிப்படை கட்டமைப்பையே கேள்வி குறியதாக்கும்" என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பேசினர். நீட் தேர்வு யார் காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அ.தி.மு.க - தி.மு.க இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தீர்மானத்தை இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவித்த சபாநாயகர் அப்பாவு, நாள் குறிப்பிடாமல் பேரவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in