மணல் குவாரி முறைகேடு; அமலாக்கத்துறையில் தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் விசாரணைக்கு ஆஜர்

 தமிழக நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா
தமிழக நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக தமிழக நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

தமிழகத்தில் நீர்வளத்துறை வாயிலாக 25க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மணல் அள்ளி வாகனங்களில் ஏற்றுவதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணியினை மேற்கொண்டு வந்த தனியார் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக மணல்களை அள்ளி மோசடி ஈடுபட்டதால் அரசுக்கு 250 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி அரசுக்கு பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் திருவள்ளூர், விழுப்புரம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.

 தமிழக நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா
தமிழக நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா

மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் ட்ரோன் மற்றும் டிஜிட்டல் கருவிகள் மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டதுடன், மணல் பரப்பில் மாட்டு வண்டிகள் மூலம் அள்ளப்படும் மணல் அளவீடு, மணல் விற்பனை செய்யப்படும் விலை ஆகியவற்றை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக மணல் அள்ளியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று காலை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஆய்வின் போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in