உணவு தரம் குறித்து புகார் அளிக்க வேண்டுமா? வாட்ஸ் அப் எண் வெளியீடு!

உணவு தரம் குறித்து புகார் அளிக்க வேண்டுமா? வாட்ஸ் அப் எண் வெளியீடு!

உணவு தரம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க தமிழ்நாடு அரசு ‘வாட்ஸ் அப்’ எண் வெளியிட்டுள்ளது.

கெட்டுபோன உணவினை சாப்பிட்டு ஏற்பட்ட உயிரிழப்பினாலும், பலருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டதாலும் தமிழ்நாடு முழுவதும் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, எளிதில் கெட்டுபோகக்கூடிய உணவுகளான ஷவர்மா, இறைச்சி உள்ளிட்ட உணவுகள் குறித்து அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக 5,018 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

இறைச்சி பறிமுதல்
இறைச்சி பறிமுதல்

இந்நிலையில், உணவு தரம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க தமிழ்நாடு அரசு ‘வாட்ஸ் அப்’ எண் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உணவு வணிகர்கள் உணவு தயாரிப்பு, சேமிப்பு உள்ளிட்டவைகளை தாங்களாகவே சுய மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான சரிபார்ப்பு படிவங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் ஆய்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். உணவு வணிகர்கள் மற்றும் உணவினை கையாளுபவர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

உணவு வணிகர்களின் சங்கங்களுக்கு கூட்டங்களை நடத்தி உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உண்ணத் தகுந்த உணவை தேர்வு செய்வது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் உணவின் தரம் குறித்து பொதுமக்கள் தங்களுடைய புகார்களை நுகர்வோர் உணவு பாதுகாப்பு செல்போன் செயலி மூலமாகவும், 94440 42322 என்னும் 'வாட்ஸ் அப்' எண் வாயிலாகவும் பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in