`தமிழக படகுகளின் கேப்டன்கள் மீண்டும் ஆஜராகணும்'- சீஷெல்ஸ் நீதிமன்றம்

தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்கள்

சீஷெல்ஸ் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து படகுகளின் கேப்டன்கள் ஏப்ரல் 19-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சீஷெல்ஸ் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தேங்காய்பட்டணம் மற்றும் கொச்சியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மண்டலத்தை சார்ந்த டொணோ, இன்பேன்ட் ஜீஸஸ், ஸ்நாபக அருளப்பர், வித்யா, வாடிமாதா ஆகிய 5 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 61 மீனவர்கள் சீஷெல்ஸ் நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இம்மீனவர்களின் உறவினர்களின் வேண்டுகோளின்படி சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி மத்திய, மாநில அரசுகளுக்கும் சீஷெல்ஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துக்கும் இவர்களை விடுவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் வைத்தார். மத்திய, மாநில அரசுகளும், இந்திய தூதரகமும் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் மார்ச் 22-ம் தேதி விசைப்படகுகளை ஓட்டிச் சென்ற 5 கேப்டன்களை தவிர 56 மீனவர்களும் அபராதமின்றி விடுதலை செய்யப்பட்டு அரசு செலவில் தனி விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர்.

ஜஸ்டின் ஆண்டனி
ஜஸ்டின் ஆண்டனி

மீதமுள்ள 5 மீனவர்களுக்கும் (படகின் கேப்டன்கள்) மார்ச் 22-ம் தேதியிலிருந்து 15 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இவர்களை விடுவிக்க இந்திய ஜனாதிபதிக்கு ஜஸ்டின் ஆண்டனி அனுப்பிய மனு ஜனாதிபதி மாளிகையிலிருந்து தகுந்த நடவடிக்கை எடுக்கக்கேட்டு உரிய துறைக்கு அனுப்பப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனும் இந்த மீனவர்களை மீட்க முயற்சி மேற்கொண்டார். இந்த மீனவர்களின் ஏழ்மை நிலையை கருத்தில்கொண்டு இந்த மீனவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்பட வேண்டுமென்ற ஜஸ்டின் ஆண்டனியின் கோரிக்கையை ஏற்று இம்மீனவர்களுக்கு இலவச சட்ட உதவிகள் சீஷெல்ஸ் நாட்டில் வழங்கப்பட்டன. இந்நிலையில் இந்த 5 மீனவர்களும் இன்று சீஷெல்ஸ் நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு ஏப்ரல் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று மீண்டும் 5 பேரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் உறவினர்களும், படகு உரிமையாளர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in