பெட்டிக்கடைகளில் போதை பொருள் விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்! முதல்வர் ஸ்டாலின்

பெட்டிக்கடைகளில் போதை பொருள் விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்! முதல்வர் ஸ்டாலின்

"பள்ளிகள், கல்லூரிகள் அருகில் பெட்டிக்கடைகளில் போதை பொருட்களை விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

"கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர், "செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி அதிகம் காணக்கூடிய மாவட்டங்களாகும். குற்ற நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகளும் காரணங்களும் இங்கு அதிகம் உள்ளன. எனவே காவல்துறை அதிகபட்ச கவனத்துடன் செயல்பட வேண்டும்.

ஒரு மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். குற்றங்கள் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாக திகழ வேண்டும். கொள்ளை முயற்சி, செயின் பறிப்பு ஆகியவை மக்கள் மத்தியில் அச்சத்தையும், சட்ட ஒழுங்கு பராமரிப்பு பற்றிய விமர்சனம் ஏற்பட காரணமாகும். எனவே மாவட்ட அளவில் நீங்கள் புதிய அளவிலான அணுகுமுறைகள், தொழில்நுட்பம், , Friends of Police ஏற்படுத்துதல் மூலம் இவ்வகை குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் நடக்காமல் தடுப்பு நடவடிக்கைகள் நீங்கள் எடுக்க வேண்டும்.

இந்த 3 மாவட்டங்களில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. அந்த பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் இடையே போதை பொருட்கள், பான் மசாலா போன்றவற்றை உட்கொள்வதால் ஏற்படும் கேடுகள் குறித்த விழிப்புணர்வினை நீங்கள் தொடர்ந்து ஏற்படுத்திட வேண்டும். அதோடு பள்ளிகள், கல்லூரிகள் அருகில் பெட்டிக்கடைகளில் போதை பொருட்களை விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சில இடங்களில் காவல்துறையினருக்கு தெரியாமல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்பில்லை என்பதை சிலர் பெரிய குற்றச்சாட்டாக பரப்பி வருகிறார்கள். இதை நான் நம்பவில்லை என்றாலும் உயர் அதிகாரிகளாகிய நீங்கள் அதை தீவிரமாக கண்காணித்திட வேண்டும். இது போன்று கஞ்சா மட்டும் போதை பொருட்கள் புழங்கும் பகுதியில் கண்டறியப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட பகுதியைச் சார்ந்த காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எவ்விதமான சமரசம் ஏற்கத்தக்கதல்ல" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in