உச்ச நீதிமன்ற தீர்ப்பு 69% இடஒதுக்கீட்டை பாதிக்கும்: எச்சரிக்கும் சி.வி.சண்முகம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு 69% இடஒதுக்கீட்டை பாதிக்கும்: எச்சரிக்கும் சி.வி.சண்முகம்

``உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதிக்கும். உடனே குலசேகரன் குழுவை செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டை காப்பாற்ற முடியும்" என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்தார்.

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இடஒதுக்கீடு வழங்குவதில் முன்னோடி மாநிலம் தமிழகமாகும். இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 69 சதவீத இடஒதுக்கீடிற்கு ஆபத்தை உணர்ந்த ஜெயலலிதா இதற்கான சட்டம் இயற்றி, அதை 9-வது அட்டவணையில் சேர்ந்து சட்டபாதுகாப்பு கொடுத்தவர் ஜெயலலிதா. நேற்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. தரவுகள் சரியாக வழங்கபடவில்லை என கூறியது.

இன்றைய அரசு வழக்கறிஞர்கள் முழுமையான சாதிவார கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட 1985-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட அம்பா சங்கர் அறிக்கையின் படி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி என பிரிவு உருவாக்கப்பட்டது. 50 சதவீதம் இருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு கொடுக்கப்பட்டது. அதன் பின் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. இந்த அறிக்கையை ஏன் அரசு மதுரை உயர் நீதிமன்றத்தில் ஏன் தாக்கல் செய்யவில்லை? கவனக்குறைவாக விடப்பட்டதா? அல்லது திட்டமிட்டு விடப்பட்டதா என்று அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என ஒப்புக்கொண்ட நீதிமன்றம் முழுமையான தரவுகள் இல்லை என சொல்லியுள்ளது. 1931-ம் ஆண்டு இந்தியாவில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புதான் தற்போதுவரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அமல்படுத்தப்படவில்லை. அம்பா சங்கர் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அரசு சொல்கிறது. ஆனால் 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி, அம்பா சங்கர் அறிக்கையின் பேரில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது என தெரிவித்தார். அதன்படி இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இன்றுவரை தொடர்கிறது. 69 சதவீத இடஒதுக்கீடை பாதுகாக்க வேண்டும் என்றால் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று 21.12.2020-ம் தேதி புதிதாக முன்னாள் நீதியரசர் குலசேகரன் தலைமையில் குழு ஆரம்பிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு இதை நடைமுறைப்படுத்தவில்லை. இட ஒதுக்கீடு வழக்கில் மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடவில்லை. அம்பா சங்கர் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. குலசேகரன் குழுவை ஏன் முடக்கியது? இன்றைய தீர்ப்பு 69 சதவீதத்தை பாதிக்கும். உடனே குலசேகரன் குழுவை செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் பின்பற்றப்படும். இடஒதுக்கீட்டை காப்பாற்ற முடியும்.

இட ஒதுக்கீடு காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முடக்கப்பட்ட குலசேகரன் ஆணையத்தை செயல்பட வைத்து அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கில் தமிழக அரசு மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும், உச்ச நீதிமன்றத்திலும் சரியாக வாதாடவில்லை. தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியது அதிமுக அரசு. ஆன் லைன் ரம்மியை தடை செய்தது. இது தொடர்பான வழக்கில் தமிழகத்திலிருந்து ஒரு வழக்கறிஞரை கொண்டும் அரசு வாதாடவில்லை. பொதுமக்களை பாதிக்கும் எந்த சட்டத்தையும் இந்த அரசு துச்சமாக எண்ணுகிறது.

இந்த ஒரு ஆண்டில் இந்த அரசு செய்த சாதனை என்னவெனில் பாலியல் கூட்டு வன்முறை என்பதுதான். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த சம்பவம் தற்போது எங்கும் நிறைந்துள்ளது. இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அன்று பொள்ளாச்சி சம்பவத்தை பூதாகரமாக்கியவர்கள் இன்று வாய்மூடி கிடக்கின்றனர். இன்று பெண்கள் மட்டுமல்ல யாருக்கும் பாதுகாப்பு இல்லை. 2.0 என்று பெயர் வைத்துவிட்டால் கஞ்சா ஒழிக்கப்பட்டுவிடுமா?

பெண்களுக்கான அனைத்து திட்டங்களையும் இந்த அரசு ரத்து செய்து வருகிறது. உதாரணமாக தாலிக்கு தங்கம், பணிக்கு செல்லும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் மானிய திட்டம், பசுமை வீடு திட்டம் என பெண்களை குறிவைத்து இந்த அரசு செயல்படுகிறது. பாலியல் வன்கொடுமையை கண்டித்து விரைவில் விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். வணிகரை பாதுகாக்க அவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதல்வரின் தந்தை பதவியில் இருக்கும் போது சிறுவணிகத்தில் அன்னிய முதலீடை எதிர்த்தது அதிமுக. அந்த சட்டத்திற்கு ஆதரவாக திமுக எம்பிக்கள் வாக்களித்துள்ளனர். முதல்வர் 5-ம் தேதி திறக்கவுள்ள சிப்காட், உணவுப்பூங்கா போன்றவைகளை அறிவித்தது அதிமுக. அதை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார் அவ்வளவுதான்" என்றார். பேட்டியின் போது எம்.எல்.ஏக்கள் வானூர் சக்கரபாணி, திண்டிவனம் அர்ஜூணன் உள்ளிட்ட அதிமுகவினர் உடனிருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in